வெள்ள நிவாரணம் உள்பட பலவற்றிலும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய அரசு. மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காகவும் நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய அரசு. சொந்த மாநிலத்திற்கு அள்ளிக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு கிள்ளி கூட கொடுக்க மறுத்திருக்கிறார் பிரதமர் மோடி என்பது ஒன்றிய அமைச்சரின் மூலமாகவே தெளிவாகத் தெரியவந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சொந்த மாநிலம் குஜராத்திற்கு 6500 கோடி ரூபாய் நிதி ஒதிக்கி இருக்கும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை? இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கக்கோரி தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் கோரிக்கையின் மீது ஒன்றிய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது? என்று மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார் தயாநிதிமாறன் எம்.பி. மேலும், நாடு முழுவதும் நடக்கும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மாநிலங்கள், நகரங்கள் வாரியாக கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விபரங்கள் என்ன? என்று கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்ப்பாட்டுத்துறை இணை அமைச்சர் தோகன் சாகு அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் 12 மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் சூரத்துக்கு 3,961.78 கோடி ரூபாயும், மும்பைக்கு 4,402.05 கோடி ரூபாயும், பெங்களூருவுக்கு 7,658.77 கோடி ரூபாயும், அகமதாபாத்திற்கு 2,596.17 கோடி ரூபாயும், டெல்லிக்கு 3,305.69 கோடி ரூபாயும், கொச்சிக்கு 146.76 கோடி ரூபாயும், புனேக்கு 1,357,73 கோடி ரூபாயும், நாக்பூருக்கு 1,199.06 கோடி ரூபாயும், பாட்னாவுக்கு 1,176.25 கோடி ரூபாயும், கான்பூருக்கு 2,629.25 கோடி ரூபாயும், போபாலுக்கு 830.54 கோடி ரூபாயும், இந்தூருக்கு 1,365.74 கோடி ரூபாயும், ஆக்ராவுக்கு 1913.68 கோடி ரூபாயும், டெல்லி -காசியாபாத் – மீரட் திட்ட பணிகளுக்கு 43,431,45 கோடி ரூபாயும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தொகை -0 தான்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்துக்கு 2,596 கோடி ரூபாயும், சூரத்துக்கு 3961 கோடி ரூபாயும் என மொத்தம் 6558 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டும் ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் அனைத்தும் மாநில அரசு திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிதிகளையும் தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது என்ற விபரங்கள் தெரியவந்துள்ளது.
இதை மனதில் கொண்டு, தமிழகத்தை இந்த அளவிற்கு வஞ்சிப்பது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு எதிராக கேள்விகள் எழந்திருக்கின்றன.