அதிமுகவில் இனி எக்காலத்திலும் ஓபிஎஸ்சை சேர்க்க மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடிக்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்கிறது ஓபிஎஸ் அணி. இந்த ஏட்டிக்கு போட்டி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
சிதறிக்கிடப்போர் எல்லாம் இணைய வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஆரம்பித்ததை, போவோர் வருவோர் எல்லாம் குழு ஆரம்பிக்கிறார்கள் என்று போட்டு கலாய்க்கிறார் எடப்பாடி. ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, இதைச்சொல்வதற்கு எடப்பாடி யார்? என்று எகிறி அடிக்கிறார்கள்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ‘’எடப்பாடி ஒன்று அதிமுக அதிபர் கிடையாது. எங்களை சேர்க்க மாட்டோம் என்று சொல்வதற்கு அவர் யார்? அவரிடம் விண்ணப்பம் கொடுத்து அதிமுகவில் சேர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ என்று ஆத்திரப்படுகிறார்.
அக்டோபர் -17ம் தேதிதான் எடப்பாடிக்கு கடைசி தேதி. அந்த தேதிக்குள் அவர் முடிவெடுத்து இணைந்துவிட வேண்டும். இல்லை என்றால் அவரை கடாசிவிட்டு மற்ற அனைவரும் இணைந்துவிடுவோம் என்றும் கொந்தளிக்கிறார் மருது அழகுராஜ்.
ஒருவேளை இணைப்புக்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்? என்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை. அக்டோபர் 17ம் தேதியுடன் ஓபிஎஸ் அத்தியாயம் முடியப்போகிறது. அவர் ஒத்துவரவில்லை என்றால் அவரை தவிர்த்துவிட்டு மற்ற அனைவரும் ஒன்றிணைந்துவிடுவோம் என்று அடித்துச்சொல்கிறார் மருது அழகுராஜ்.
சரி, அக்டோபர் 17ம் தேதியை ஏன் குறித்து வைத்து அடிக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்? அதிமுகவின் நிறுவன தினம் அக்டோபர் 17 ஆகும். 1972ல் அக்டோபர் 17ம் தேதி அன்று மதுரையில் ஜான்சி ராணி பூங்கா அருகேதான் அதிமுக என்ற கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
முன்னதாக சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எம்.ஜி.ஆர். சென்றதும், வழிநெடுக ரயிலை வழிமறித்து தொண்டர்கள் ஆர்ப்பரித்ததும் அதிமுகவின் வரலாறு.