அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லி பேசினார்.
‘’திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு சென்றார் எம்.ஜி.ஆர். போகிற வழியில், எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து ஒரு பெட்டிக்கடைக்காரர் காரை நிறுத்தி எம்.ஜி.ஆருக்கு சோடா பாட்டில் கொடுத்தார்.

சோடா பாட்டிலின் பாதியை குடித்த எம்.ஜி.ஆர். பாட்டிலில் சோடா மீதி இருந்த நிலையில் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார். பாட்டிலில் எம்.ஜி.ஆர். குடித்த சோடாவின் மீதி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டனர் ரசிகர்கள்.
அந்த சோடாவை வாங்கிக் குடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டி. அப்போது அந்த கடைக்காரர் சமயோசிதமாக யோசித்தார். அவர் ஒரு அண்டாவை கொண்டு வந்து அதில் தண்ணீரை நிரப்பில் அதில் எம்.ஜி.ஆர். குடித்த சோடாவை ஊற்றி ரசிர்களுக்கு, கட்சிக்காரர்களுக்கு எல்லாம் டம்ளரில் கொடுத்தார். இது நடந்த சம்பவம்.’’ என்றார் வளர்மதி.
