திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் காட்டி வந்த வைரமுத்து இசையமைப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார். வேட்டைக்காரி -2 படத்திற்கு இசையமைத்து பாடல்கள் எழுதுகிறார் வைரமுத்து.
வேட்டைக்காரி -1 படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இந்த ரகசியத்தை உடைத்தார் படத்தின் இயக்குநர் காளிமுத்து. கதையை கேட்டவுடன் வேட்டைக்காரி என்று டைட்டில் வைத்ததே வைரமுத்துதானாம்.
வேட்டைக்காரி-1 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ‘’ஒரு இயக்குநரை பார்த்து அந்த படத்தின் ஹீரோ, எனக்கொரு குளோஸ் அப் காட்சி வைக்க முடியுமா என்று கெஞ்சுகிறார். உன் முகத்துக்கு குளோஸ் அப் கேட்குதா? பல்லு வேறு எத்திக்கிட்டு இருக்கு. குளோசப் காட்சி வச்சா அருவருப்பா வரும் என்று சொல்லி விட்டார். அப்படி நிராகரித்த அந்த இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கன். அப்படி நிராகரிக்கப்பட்ட நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எந்த முகம் நிராகரிக்கப்பட்டதோ அந்த முகத்தை நெஞ்சில் பச்சைக்குத்திக்கொண்டு இருந்தார்கள் ரசிகர்கள். ஆகவே, யாரை நிராகரிக்க நினைக்கிறோமோ அவரிடமே சென்று அவரின் நிழலில் இளைப்பாற வேண்டிய காலம் வரும்.
இந்த ஆள் வசனம் பேசினால் மீன் வாயை திறப்பது போல் இருக்கிறது. அதனால் இந்த ஆளை படத்தில் இருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்கிறார்கள். இல்லையே வாயை திறக்காமல் வசனம் பேசச்சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அது எப்படி முடியும்? அவரை நீக்கிவிட்டு கே.ஆர்.ராமசாமியை போட முடியுமா? என்று முயற்சித்தனர். அந்த விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். படம் பராசக்தி. அந்த நடிகர் 50 ஆண்டுகாலம் கலையுலகில் சிம்மாசனமிட்டு ஆண்டார். யாரை யார் நிராகரிப்பது?
இன்னும் சினிமாவுக்கான முகவெட்டு உனக்கு இல்லை என்று இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்டவர் ஹேமமாலினி. இந்த நிராகரிப்பினாலேயே அந்த அம்மையார் இந்திக்கு சென்று வெற்றி பெற்ற பின்னர், என் வாழ்நாளில் என்னை நிராகரித்த தமிழ்சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டார்’’ என்றார்.
தொடர்ந்து பட தலைப்புகள் தமிழிலில் இல்லாதது குறித்தும், தற்கால பாடல்கள் வெற்றி பெறாமல் போவது குறித்தும் பேசினார்.
கதை என்கிற இடுப்பு இருந்தால்தான் பாடல் உட்கார முடியும். இப்போதெல்லாம் இடுப்பே இல்லை என்று வறுத்தப்பட்டார்.
பாடல்கள் நலிந்துபோகக் காரணம் பாடல்கள் உட்காரக் கதையில் இடுப்பில்லாமல் போனது. படத்திற்குச் செய்வது போலவே பாடல்களின் உள்ளடக்கத்திற்கும் திரைக்கதை செய்ய வேண்டும். இந்தப் படத்தில் காடு களமாகி இருப்பதனால் மனிதர்களையும் விலங்குகளையும் ஒப்பிட்டு ஒரு பாடல் எழுதி இருக்கிறேன்
‘ஐந்து பெரிது ஆறு சிறிது’ என்ற எனது புகழ்பெற்ற கவிதையின் சாரத்தைப் பாட்டுக்குள் பரிமாறியிருக்கிறேன் அது கவிதைக்குக் கவிதையாகும் பாட்டுக்குப் பாட்டாகும் என்றார்.
தனது பேச்சில் இசை, மொழி குறித்தெல்லாம் மேலும் பேசிய வைரமுத்து, இறுதியாக ஒரு கோரிக்கை வைத்தார்.
தயவு செய்து இந்த பேச்சில் எதையும் சர்ச்சை ஆக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சர்ச்சையை ஊடகங்கள் உண்டாக்க முடியும். தயவு செய்து சர்ச்சையை உண்டாக்கி விடாதீர்கள். உங்கள் சர்ச்சையை எங்களால் சமாளிக்க முடியாது என்றார்.