
வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து உற்பத்தி, சேவை மற்றும் கட்டுமான துறைகளில் பணி செய்யும் பல தொழிலாளர்களை நாம் பார்ப்பதுண்டு. அப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை சூழல், பணி நேரம், வருமானம் முதலானவற்றை ஆய்வு செய்து, அவர்களுக்கு மாநில அரசு எந்த வகையில் உதவலாம் எனத் தமிழ்நாடு மாநில திட்டக் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் யார்? அவர்களுக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கிறது? அவர்களின் வருவாய் நிலை மற்றும் இங்கு பணிபுரியும் போது அவர்களின் வாழ்க்கை நிலைமை ஆகியவற்றைக் கண்டறிய இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் சொந்த ஊர்களில் சிறந்த வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் இல்லாதது தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 811 புலம்பெயர் தொழிலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 53 சதவீதத்தினர் 8 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வேலை செய்கின்றனர்.

குறிப்பாகக் கட்டுமானத் துறையில் பெரும்பாலானோர் 10 மணி நேரமும், உற்பத்தித் துறையில் ஈடுபடுபவர்களில் பாதிக்கும் மேலானோர் 8 மணி நேரத்தைத் தாண்டியும் வேலை செய்கின்றனர். இன்னும் கூடுதலாகச் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கின்றனர்.
இவர்களில் 84 சதவீதத்தினர் எந்த எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமும் இல்லாமல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வைப்பு நிதி, சுகாதார காப்பீடு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு என எந்த பலனும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இத்தொழிலாளர்களில் அதிகப்படியாக 38 சதவீதத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதேபோல் பட்டியல் பழங்குடியினர் 29 சதவீதத்தினரும் பட்டியல் ஜாதியினர் 24 சதவீதத்தினரும் உள்ளனர்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் சராசரி மாத வருமானம் ரூ.15,902 ஆக உள்ளது. ரங்கராஜன் குழு முன்மொழிந்த முறைப்படி 2022-23 காலகட்டத்தில் நகரத்தில் வசிப்பவரின் வறுமைக்கோடு ரூ.3,639 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பார்க்கையில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் வறுமைக்கோடு என்பது ரூ.14,556 ஆக உள்ளது. இந்த கணக்குப்படி இவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
சராசரி வருமானம் துறை ரீதியில் பார்க்கும் போது உற்பத்தி (ரூ.14,534) மற்றும் சேவை (ரூ.17,025) தொழிலாளர்களைக் காட்டிலும் கட்டுமான தொழிலாளர்கள் (ரூ.18,696) சற்று அதிக சம்பளம் பெறுகின்றனர். தங்களின் வருமானத்தில் சுமார் 15 சதவீதத்தை வீட்டு வாடகைக்காகச் செலவிடுகின்றனர். இருப்பினும் மோசமான இருப்பிட வசதியையே கொண்டுள்ளனர்.
இப்படிப் புலம்பெயர்ந்து வேலை செய்வதின் மூலம் கூடுதலாகச் சம்பாதிப்பதாகவும், இதன் மூலம் தங்கள் குடும்பங்களின் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குக் கூடுதல் செலவு செய்ய முடிவதாகவும் அத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சொந்த ஊரில் நிலம் வாங்குவது, கடன் அடைப்பது போன்ற பொருளாதார நடவடிக்கையிலும் ஈடுபட முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.