ஐந்தாவது அமைச்சரவை மாற்றத்தில் மூன்று பேர் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மற்றும் புதியவர்கள் 2 பேர் என 4 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆனது.
புதியவர்கள் 2 பேரில் ஒருவர் கோவி.செழியன். இன்னொருவர் ஆர்.ராஜேந்திரன்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவி.செழியன். கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த, திருவிடைமருதூருக்கு உட்பட்ட ராஜாங்கநல்லூர் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் செழியன். தந்தை கோவிந்தன் திமுக. இதனாலேயே 8ம் வகுப்பும் படிக்கும்போது செழியனுக்கு முரசொலி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
முரசொலியில் வரும் கலைஞரின் கடிதங்களை படித்துவிட்டு, அதை அப்படியே கிராம மக்களிடையே பேசிக்காட்டி கைத்தட்டல் பெறுவார். இந்த பழக்கம்தான் பின்னாளில் திமுக பேச்சாளர் ஆகும் ததியை பெற்றுத்தந்திருக்கிறது செழியனுக்கு.
முதல் பட்டியலின சேர்மன்:
1980ல் கும்பகோணம் கல்லூரியில் படித்தபோது மாணவர் பேரவைத் தேர்தலில் போடியிட்டு வென்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் பட்டியலின சேர்மன் ஆனார்.
பிரமாணர்கள் ஆதிக்கம் அதிகமாகவே இருந்த அந்த கும்பகோணம் கல்லூரியில் முதல் பட்டியலின மாணவர் தலைவராக வெற்றி பெற்றது தமிழகம் முழுவதும் பரவியது. அந்த காலத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு இணயாக பேசப்படும் கும்பகோணம் கல்லூரியின் தேர்தல்.
கும்பகோணம் கல்லூரியை அடுத்து சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர் திமுகவிலும் செயல்பட்டு வந்தார் செழியன். அப்போது மாணவரணி துரைமுருகன் பொறுப்பில் இருந்தது.
சட்டக்கல்லூரியில் படித்தபோது கல்லூரி விட்டதுமே தங்கும்விடுதிக்கு செல்லாமல் நேராக அறிவாலயம் சென்றவர் செழியன். அறிவாலயத்திற்கு கலைஞர் வரும்போதெல்லாம், ‘’தானைத் தலைவர் கலைஞர் வாழ்க..முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க’’ என்று சொல்லும் செழியனின் குரல் தனித்து தெரியும். 93ல் கோவையில் நடந்த மாநில மாநாட்டிற்காக கோவை சென்றார் கலைஞர் கருணாநிதி. அப்போது கோவை ரயில் நிலைத்தில், அறிவாலயத்தில் செய்தைதைப்போலவே கோஷம் எழுப்ப, அவரின் வித்தியாசக்குரலை கேட்டு அழைத்து கலைஞர் கருணாநிதி பாராட்டினார்.
அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழங்களில் முனைவர் பட்டங்களை பெற்ற செழியன், திமுகவில் மாணவரணி, வர்த்தக அணி பொறுப்புகளில் இருந்து வந்தாலும் தலைமைக்கழக பேச்சாளர் என்கிற அங்கீகாரம் கிடைத்தது.
2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் செழியன். அதில் வெற்றி பெற்ற அவர், 2016, 2021 தேர்தலிலும் வென்றார்.
எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தபோதிலும் சில ஆண்டுகள் வரையிலும் கூட வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார் செழியன். அமைச்சர் கே.என்.நேரு ஒருமுறை அவரது வாடகை வீட்டைப்பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய், அவர் அறிவுறுத்தலின் பேரில்தான் வீடு கட்டியிருக்கிறார் செழியன்.
முதல் பட்டியலின உயர்கல்வித்துறை அமைச்சர்:
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர் உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். அந்தப்பெருமையை பெற்றிருக்கிறார் செழியன். இவர் அமைச்சரானதன் மூலம் டெல்டா பகுதிக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.