நெல்லையில் நடந்த நாதக கூட்டத்தில் கட்சியினரை சாதிய ரீதியாக ஒருங்கிணைக்கிறார் என்று நிர்வாகி மீது சீமான் குற்றம்சாட்ட, அவர் மறுத்துப்பேச, ‘’இது என் கட்சி வெளியே போ’’ என்று சொல்லி அவரை அனுப்ப, அந்த நிர்வாகிக்கு ஆதரவாக இன்னொருவர் பேச அவரையும் திட்டி அனுப்பி விடுகிறார் சீமான். இந்த விவாதத்தில் நாதக கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அந்த நிர்வாகியை அடிக்க பாய்ந்ததாக குற்றச்சாட்டு. ஆனால் இதை மறுக்கிறார் சாட்டை துரைமுருகன்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’சர்வாதிகாரம் இல்லாது எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த ஒரு செயலும் அது நேர்மையாக இருக்காது. ஒரு நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள் எல்லோரும் அன்பான சர்வாதிகளாகத்தான் இருந்தார்கள்.
ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால் அதை 10 முறை வீட்டுப்பாடம் எழுதி வரச்சொல்லுவது மாணவன் பார்வையில் அது சர்வாதிகாரமாகத் தெரியும். ஆசிரியரின் பார்வையில் அது மாணவனின் நலன் பேணுவதாகத் தெரியும். எது முக்கியம்?
ஒரு குழந்தை சாக கிடக்கிறது. ஊசி போட்டா பிழைக்கும். ஆனா வலிக்கும். வலிக்குமேன்னு ஊசி போடாம போயிடட்டா? வலிச்சாலும் பரவாயில்லை. பிழைத்துக்கொள்ளுமே என்று ஊசி போடட்டுமா? என்ன செய்யணும்?
கட்சிகளுக்கு ஒரு விதி இருக்கிறது. அதை மீறினால் எந்த கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் வெளியே போ என்று தூர போட்டுவிட வேண்டும்’’ என்றார்.
அதுகுறித்து மேலும்சில கேள்விகளுக்கு, ‘’இது மக்கள் பிரச்சனை அல்ல. கட்சி பிரச்சனை. இது என் பிரச்சனை. இதைப்பற்றி கேட்பது அசிங்கம்’’ என்று தவிர்த்துவிட்டார்.
சீமானின் இந்த சர்வாதிகார பேச்சுக்கு, ‘’சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.