இருபது நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் தீபாவளி போனஸ் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் 20% வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
முதல்வர் அறிவித்து 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் ராமதாஸ்,. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியிருக்கிறார்.
தீபாவளிக்கு முழுமையாக ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை போனஸ் வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ராமதாசின் இந்த கோரிக்கைக்கும் கண்டனத்திற்கும் அமைச்சர் சிவசங்கர் விடுத்துள்ள பதில் அறிக்கையில், ‘’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் முதலமைச்சர் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற 1,13,741 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33%போனசும், 11,67% கருணைத்தொகை ரூ.182.32 கோடியும் வழங்க உத்தரவிட்டபடி, 25.10.2024ல் உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரூ.182.32 கோடியும் போக்குவரத்து தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருக்கின்றது.
இது தெரிந்தும் தெரியாதது மாதிரி ராமதாஸ் பேசுவது, வேறு அரசியல் செய்ய வழி இல்லாமல் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியதாகும்’’ என்கிறார்.