தவறான தகவல்கள் மற்றும் பொய் செய்திகள் பரப்பப்படுவதே இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உள்ளதாக உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தவறான தகவல்’ என்பது ஒருவர் வேண்டுமென்றே போலி செய்திகளை பரப்பி மக்களின் சிந்தனையைத் தவறாக வழிநடத்த முயலும் சதியாக வரையறுக்கப்படுகிறது.
தவறான தகவல்களால் இந்தியா மிகப்பெரிய ஆபத்துகளில் முதன்மையானப் பிரச்சனையாக உள்ளதாக, உலக பொருளாதார மன்றம் இந்த மாதம் வெளியிட்ட ‘2024 உலகளாவிய அபாயங்கள் பற்றிய அறிக்கை’யில் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் – சமூகத்தில் அவநம்பிக்கையை அதிகரிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய ஆபத்துகளில் முதலிடத்தில் இருப்பது ‘தவறான தகவல்கள் (Misinformation)’ என அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
சுமார் 1500-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் உதவியால் வெளியிடப்பட்ட உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் இந்தியா எதிர்கொள்ளும் பல்வேறு ஆபத்துகளை பட்டியலிட்டுள்ளது.
இந்தாண்டு இந்திய மக்கள் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ‘தவறான தகவல்கள்’ இந்தியாவில் மிகக் கடுமையான ஆபத்தாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, உலகளவில் மக்களைப் பிளவுபடுத்தும் உணர்வு அதிகரித்து வருவதால் தவறான தகவல்கள் கடுமையான ஆபத்துக்கு வழிவகை செய்து ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொய் செய்திகளைத் தொடர்ந்து, தொற்று நோய்கள், சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் இந்தியாவின் முதன்மையான அச்சுறுத்தல்களாக இருக்கும் என அறிக்கை கூறுகிறது.
2019 இந்திய மக்களவைத் தேர்தலில் போலிச் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருந்தன. ஆளுங்கட்சி Whatsapp மற்றும் Facebook தளங்களை ஆதரவாளர்களுக்குச் செய்திகளைப் பரப்ப எப்படி ஆயுதமாக்கின என்பதும் பெரிதாக விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்களின் போது தவறான தகவல்கள் பரப்பட்டதால், மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.
உலகளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அதிக ஆபத்துகளை விளைவிக்கும் என உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை கூறுகிறது.
அடுத்தடுத்த இடங்களில், செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் பரப்பப்படும் பொய் செய்திகள், சமூக – அரசியல் பிரச்சனைகள், அதிகரிக்கும் வாழ்வாதார செலவுகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் என உலக ஆபத்துகளின் முதன்மையான பிரச்சனைகளாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.