
கள்ளக்குறிச்சி சம்பவம் , ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் இரண்டிலும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இரண்டு சம்பவத்திலுமே காவல்துறையில் அதிகாரிகளை உடனுக்குடன் இடமாற்றம் செய்து அதிரடி காட்டியிருக்கிறது அரசு. ஆனால், காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் சட்டம் ஒழுங்கு சீராகிவிடாது என்கிறார் எடப்பாடி.
இதனால், அரசு மீது குறைசொல்ல வேண்டுமென்றே இப்படி எதையாவது மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

அதே நேரம், உடனுக்குடன் அதிகாரிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தும் திமுக அரசு மீது குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் இப்படி ஒரு நடவடிக்கைகளை எடுத்தாரா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். இப்படி நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அதிமுக ஆட்சி எப்படி எல்லாம் பாதுகாத்தது என்று பட்டியலிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது சம்மந்தப்பட்ட காவல் துறையினரை கூட இடமாற்றம், சஸ்பெண்ட் என முதல் கட்ட நடவடிக்கைகளை கூட எடப்பாடி பழனிச்சாமி அரசு எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் குட்கா ஊழலில் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் போன்றவர்களை பாதுகாக்கும் பணியைதான் செய்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அவரின் பாதுகாப்பு பணிக்காக போன போது டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவரை உடனடியாக அதிமுக அரசு சஸ்பெண்ட் கூட செய்யாமல் அவரை பாதுகாத்தது.
ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அந்த கைதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்டோபர் நெல்சன், கே.முத்துக்கருப்பன், எஸ்.ஜார்ஜ் ஆகியோரை மத்திய அரசு பணிக்கு மாற்ற அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைக் கூட மதிக்காமல் போலீஸ் அதிகாரிகளை பாதுகாத்தவர்தான் ஜெயலலிதா. இன்னும் சொல்லப் போனால் கலைஞர் கைது விவகரத்தில் தொடர்புடைய கிறிஸ்டோபர் நெல்சனுக்கு தகவல் ஆணையர் பதவி எல்லாம் கொடுத்து கவுரவித்தார்கள்.

என்ன நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடமாற்றமோ அல்லது சஸ்பெண்ட் நடவடிக்கையோ எதுவும் எடுக்காமல், மாறாக அவர்களுக்கு உயர்பதவிகள், பரிசுகள் கொடுத்து அதிமுக அரசு பாதுகாத்தது போல் அல்லாமல், உடனுக்குடன் சஸ்பெண்ட், இடமாற்றம் போன்ற உத்தரவுகளை திமுக அரசு செயல்படுத்துகிறது என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம்தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதலில் 9 பேர் பலியான தகவல் வெளியான போதே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை திமுக அரசு துரிதமாக பணியிட மாற்றம் செய்தது.

ஆட்சியர் மட்டுமல்ல கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக எஸ்பி சமய்சிங் மீனா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர்.
இதனால், அதிமுக ஆட்சி போல் போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்காமல் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுக்கிறது திமுக அரசு என்று சொல்லி, மறைமுகமாக கடந்த கால அதிமுக ஆட்சியை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.