முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதமும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்கியது.
வயிற்றுக்கு நிறைவும், செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச்சாலைகளை மாற்றும் முயற்சிதான் சமூகநீதியை உள்ளடக்கிய இந்த காலை உணவுத்திட்டம்.
மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்தல், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், இரத்தசோகை, குறைபாட்டினை நீக்குதல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல், தக்க வைத்துக்கொள்ளுதல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய குறிக்கோள்களைக் கொண்டு இந்த திட்டத்தினை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம், தினமும் 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டம் நாட்டிற்கே முன்னோடித்திட்டமாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் பலனை உணர்ந்து, கனடா அரசும் ‘தேசிய பள்ளி உணவுத்திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படி உலகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது காலை உணவுத்திட்டம்.
இந்த காலை உணவுத்திட்டத்தினால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், ‘’முன்பெல்லாம் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது, அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதே போன்று அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் கொண்டு வந்த பின்னர், சேர்க்கை விகிதமும் பெருமளவு அதிகரித்து வருகிறது’’ என்று பெரிமிதத்துடன் சொல்கிறார்.