ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் பட்டினிச்சாவு ஒரு புறமும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை மறுபுறமும் உருவானது. தமிழ்நாட்டில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்திகளும் வெளியாயின. இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்றன. உண்மை நிலவரம் குறித்த அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாயின.
2004ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. இடதுசாரிகளும், தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகளும் ஆதரவளித்த அந்த அரசு, பட்டினிச் சாவைத் தடுப்பதற்கும், விவசாயிகளின் தற்கொலைக்கு முடிவு கட்டுவதற்கும் கொண்டு வந்த திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மக்களின் மொழியில் இது 100 நாள் வேலைத் திட்டம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் கிராமப்புற-விவசாயப் பின்னணி கொண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அதற்கான ஊதியத்தை வழங்குவதன் மூலம், ஆண்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நாளுக்கான வேலைக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும். மீதமுள்ள 265 நாட்களில் அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கக்கூடிய வேலை எத்தனை நாட்கள் கிடைக்கிறதோ அதன் வாயிலாக வறுமையை எதிர்கொள்ள முடியும். உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும். பட்டினிச் சாவும் விவசாயிகளின் தற்கொலையும் முடிவுக்கு வரும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலையும், பட்டினிச்சாவும் பெருமளவு குறைந்துள்ளது. அதில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்தத் திட்டத்தினால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை என்றும், 100 நாள் வேலை என்ற பெயரில் வெறும் கணக்கு மட்டும் காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் வந்தன. ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது சில குறைபாடுகள்- கோளாறுகள் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தின் பரவலான பயன்களே அத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட வைக்கும். அந்த வகையில், 100 நாள் வேலைத் திட்டம் பல மாநிலங்களிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது குறித்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலிருந்தும் செய்திகள் வந்தபடியே உள்ளன.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டிய நிதி நிலுவையில் இருப்பது இதற்கு முக்கியமான காரணமாகும். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்தது முதலே இந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன. 2024 பிப்ரவதி மாதத்தில் இந்தத் திட்டத்திற்காக மோடி அரசு 86,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியில் உள்ள பற்றாக்குறை குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் கூடுதல் நிதியை மோடி அரசு ஒதுக்கவில்லை.
குளங்கள் தூர் வாருவது, வாய்க்கால்களை சீரமைப்பது, ஒரு சில கட்டடப்பணிகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் அதற்கான கருவிகள், பொருட்கள் வாங்குவதற்கு மத்திய அரசின் சார்பில் 60% நிதியும், மாநில அரசின் சார்பில் 40% நிதியும் ஒதுக்கப்படவேண்டும். மத்திய அரசு தனது பங்கான 5,715 கோடி ரூபாயை ஒதுக்காத காரணத்தால் சிமெண்ட், கல், கட்டுமானக் கருவிகளை வழங்கக்கூடிய நிறுவனத்தார் அவற்றை நிறுத்தி வைத்த காரணத்தால், பணிகள் முடங்கியிருப்பதுடன், 100 நாள் வேலை மூலம் கிடைத்து வந்த ஊதியத்தையும் பெற முடியாமல் கிராமப்புற ஆண்-பெண் தொழிலாளர்கள் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 1,056 கோடி ரூபாயை வழங்கவேண்டும் என்பதையும், 91 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்புடன் 100 நாள் வேலைத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, கிராமப்புற ஆண்-பெண் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதால், 100 நாள் வேலைத்திட்டத்தின் மனித உழைப்பு நாட்களை அதிகப்படுத்திட வேண்டும் என்று 2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
கூலி தராமல் உழைப்பை வாங்குவது என்பது மனித உரிமைக்கு எதிரான சுரண்டல். பட்டினிச்சாவைத் தடுத்த திட்டத்தை மத்திய அரசு பட்டினிப் போடக்கூடாது.