நிதித் தொழில்நுட்ப நிறுவனமான MobiKwik, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்காமல் MobiKwik Wallet மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில் ‘POCKET UPI’ என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
வங்கி அறிக்கைகளை (Statements)குறைப்பதற்கு உதவியாகவும் அனைத்து UPI பரிவர்த்தனைகளையும் ஒருங்கிணைக்கவும் ‘POCKET UPI’ வசதி உதவும் என்றும், இதன் மூலம் பயனர்கள் பரிவர்த்தனைகள் பற்றிய தெளிவான தகவலை பெறுவார்கள் என்றும் MobiKwik நிறுவனம் தெரிவித்துள்ளது.
UPI ஐடிக்கள் நேரடியாக வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, பயனர்கள் தாங்கள் மேற்கொள்ளும் சிறிய அல்லது தொடர்ச்சியான செலவுகளைக் கவனிக்காமல் இருக்கும் போக்கு இருந்து வருகிறது. அதை நிவர்த்தி செய்வதே ‘POCKET UPI’ பயன்பாட்டின் முதன்மை நோக்கமாகும், MobiKwik கூறியுள்ளது.
மேலும் திறமையான பட்ஜெட் மற்றும் நிதி கண்காணிப்பை எளிதாக்குவதற்கு பயனர்களுக்கு அவர்களின் செலவு முறைகள் பற்றிய தெளிவான புரிதலை ‘POCKET UPI’ வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பணப் பரிவர்த்தனைகளுக்கு MobiKwik Wallet-ல் இருந்து நிதி எடுக்கப்படும் என்பதால் பயனர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும், நேரடி வங்கி பரிமாற்றங்களுடன் தொடர்புடைய நிதி மோசடி ஆபத்துகளை ‘POCKET UPI’ குறைக்கும் எனவும் MobiKwik நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த நேரங்களிலும் ‘தடையின்றி’ பயனர்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்வதை ‘POCKET UPI’ உறுதிசெய்கிறது.
POCKET UPI எப்படி வேலை செய்கிறது
முதலில் பயனர்கள் MobiKwik செயலியில் தனிப்பட்ட Wallet UPI ஐடியை உருவாக்க வேண்டும்
பின்னர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி Wallet UPI ஐடியில் பணத்தைச் சேர்க்க(Top-up செய்ய) வேண்டும்
பணத்தை Top-Up செய்த பிறகு, பயனர்கள் தங்கள் Wallet-லிருந்து நேரடியாக UPI பரிவர்த்தனைகளை தொடங்கலாம்
மேலும், பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பணத்தை Top-Up செய்துக் கொள்ளலாம்