அதென்ன மோதானி என்று கேட்கத் தோன்றும். சமூக வலைத்தளத்தில் இப்படியொரு சொல் உலவுகிறது. பிரதமர் மோடியையும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானியையும் இணைத்து ‘மோதானி’ என்ற சொல்லை ஒரு பதிவர் உருவாக்கியிருக்கிறார். இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள லஞ்சப் புகார் வழக்கு, அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தள்ள பிடிவாரண்ட், அதானி நிறுவனத்தின் மறுப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள், அதானிக்கு பா.ஜ.க. தரப்பின் மறைமுக ஆதரவுக் குரல் இவற்றின் பின்னணியில்தான் ‘மோதானி’ என்ற சொல் உருவாகியுள்ளது.
துறைமுகம், விமானநிலையம், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் கொடிக் கட்டிப் பறக்கிறது அதானி குழுமம். அதன் தலைவராக இருப்பவர் கவுதம் அதானி. இந்தக் குழுமத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் பதிவு பெற்றுள்ள அதானி நிறுவனங்களின் கணக்கு வழக்கு என்ன என்பது பற்றி சரியான விவரங்கள் கிடையாது. ஷெல் கம்பெனிகள் எனப்படும் பெயரளவுக்கான நிறுவனங்களைத் தொடங்கி, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிடுவதற்கு இத்தகைய ஷெல் நிறுவனங்கள் பயன்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து நடத்தினால், அந்த நாட்டின் சட்டதிட்ட விதிகளுக்கு முழுமையான அளவில் உண்மையாக இருக்க வேண்டும். அதானி நிறுவனம் அப்படி செயல்படவில்லை என்பதுதான் அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு.
அமெரிக்கப் பதிவு நிறுவனங்கள் மூலமாக கவுதம் அதானியும் அவரது உறவினரான சாகர் அதானி உள்ளிட்ட 7 பேரும் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுக்க ஒப்புக்கொண்டது தொடர்பான விவரங்களை அமெரக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்கப் பதிவு பெற்ற நிறுவனத்தின் மூலம் அதானி குழுமம், டாலர்களில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, இந்தியாவில் மின் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு டாலரில் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. இதன் மூலம் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்தால் பெற முடியும் என வர்த்தகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் அதானி மீதான குற்றவியல் குற்றச்சாட்டும் வழக்கறிஞர்களால் வைக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் தவறான அறிக்கைகள் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இருநத பல கோடி டாலர் நிதியைப் பெறுவதற்காக இத்தகைய மோசடிகள் நிகழ்ந்துள்ளன எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டதிட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்பதல் அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் வலுவாக வைக்கப்படுகின்றன. இந்தியப் பிரதமருக்கு நெருக்கமானவரும், பிரதமருடன் விமானத்தில் ஒன்றாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடியவரும், பிரதமரின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ.க ஆட்சி அமைந்தபிறகு பல தொழில்களில் விறுவிறு வளர்ச்சியடைந்து, இந்தியாவில் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற உயரத்தை எட்டியவருமான அதானி மீது அமெரிக்க முன்வைக்கும் குற்றச்சாட்டும், அந்நாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கும் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியர் ஒருவர் வெளிநாடுகளில் நிறுவனங்களைப் பதிவு செய்து மோசடி செய்யும்போது அது குறித்த விவரங்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது செபி அமைப்பாகும். ஆனால், செபியின் தலைவரே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு அவர்களைக் காப்பாற்றுவதில்தான் கவனமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இத்தகைய மோசடிக்காரர்கள்தான் பிரதமர் மோடி ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதானி குழுமத்தை தவிர்த்துவிட்டு எந்த ஒரு மாநிலமும் செயல்பட முடியாது என்கிற அளவிற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் துறைமுகம், மின் உற்பத்தி துறைகளில் அதானி குழுமத்தை கால் பதிக்கச் செய்திருக்கிறது மோடி அரசு. பா.ஜ.க. அரசின் மின்சாரம் தொடர்பான திட்டங்களால், மாநிலங்கள் மத்திய அரசின் நிறுவனத்தின் மூலம் மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளன. மத்திய அரசு நிறுவனம் அதானி குழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்துதான் மின்சாரத்தை கொள்முதல் செய்கின்றன. ‘மோதானி’ என்பதன் அர்த்தம் சாதாரணமானதாக இல்லை. விரிவான-ஆழமான வில்லங்கமாக இருக்கும் போல.