ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நரேந்திரமோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று ராகுல்காந்தி சொல்லி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜூன்4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அடித்துச்சொல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அதே நேரம், அமித்ஷாவை பிரதமராக்கவே பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது என்று கெஜ்ரிவால் கொளுத்திப்போட்டதில், பற்றி எரிகிறது பாஜக வட்டாரம். உண்மை என்பது குறித்து அமித்ஷா விளக்கம் அளித்திருக்கிறார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு காரணமாக பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற அம்பாலா தொகுதி வேட்பாளர் கட்டாரியாவை விவசாயிகள் விரட்டி அடித்துள்ளனர்.
பாஜகவுக்கு இப்படி கடும் எதிர்பு எழுந்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதை அடுத்து நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கி அதிரடி காட்டி வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
‘’நான் சிறையில் இருந்து வந்த 20 மணி நேரத்தில் பலரிடம் போனில் தொடர்புகொண்டு பேசினேன். அதன் மூலம் ஒரு உண்மை தெரியவந்தது. ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மஹாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது’’ என்றும், ’’ஜுன்4ம் தேதி இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்’’ என்றும் தெரியவந்ததாக டெல்லியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் கடல் போல் திரண்ட தொண்டர்கள் தந்த உற்சாகத்தில், ‘’மகாராஷ்டிரா, உ.பி., பீகார், ஹரியானா என்று நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. அதனால் நான் திரும்பவும் சொல்கிறேன்..ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்’’ என்கிறார்.
இதற்கிடையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ’’இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். நான் பாஜகவை பார்த்து கேட்கிறேன்; பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யா?’’என்று கேட்டு சலசலப்பை ஏற்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால், ‘’பாஜகவில் 75 ஆகிவிட்டால் ஓய்வு பெற்றுவிட வேண்டும். அப்படிப்பார்த்தால் பாஜக வெற்றி பெற்றாலும் மோடி பிரதமர் ஆக முடியாது. அதனால் அமித்ஷாவைத்தான் பிரதமர் ஆக்குவார்கள். அமித்ஷாவை பிரதமர் ஆக்குவதற்காகத்தான் பாஜக இப்படி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.’’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்.
அதுமட்டுல்லாமல், ’’பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யோகி ஆதித்யநாத், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஷிவ்ராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே ஓரங்கட்டி விடுவார்கள்’’ என்று கெஜ்ரிவால் கொளுத்திப் போட்டதால், பற்றி எரிகிறது பாஜக.
இதனால் உட்கட்சியில் கடும் சலசலப்புகள் எழுந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘’பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மோடிதான் 3வது முறையாக நாட்டின் பிரதமராக வருவார்’’ என்று சொன்னவர், ‘’ எதிர்க்கட்சியினர் தவறான கருத்தை பரப்புகிறார்கள். 75 வயது ஆகிவிட்டால் ஓய்வுபெற வேண்டும் என்கிற மாதிரி எல்லாம் பாஜகவின் அரசியல் சாசனத்தில் எதுவும் இல்லை.
அடுத்து வரக்கூடிய தேர்தல்களையும் மோடியே வழிநடத்துவார். 2029 வரையிலும் மோடிதான் நாட்டை வழிநடத்துவார். பொய்களை பரப்பி அதன் மூலம் வெற்றி பெற நினைக்கிறார்கள் இந்தியா கூட்டணி கட்சியினர்’’ என்று விளக்கம் தந்து, மோடியா? அமித்ஷாவா? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.