ராமரையும் சீதாவையும் வைத்தே அரசியல் செய்து வருகிறது பாஜக. இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் ராமர்கோயிலை அவசர அவசரமாக கட்டி அதை பெரும் சாதனையாகச் சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார் மோடி. அடுத்து சீதாவுக்கும் கோயில் கட்டுவோம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம். என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்போகிறோம் என்று சொல்லாமல் கோவிலை வைத்தே அரசியல் செய்து வருகிறது பாஜக என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பீகார் மாநிலத்தின் வடக்கே நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டி இருக்கும் மிதிலை பிரதேசத்தில் அமைந்துள்ளது சீதாமர்ஹி மாவட்டம். சீதாமர்ஹி தொகுதிக்கு மே20ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
சீதாமர்ஹியில் சீதை கோயில் உள்ளது. ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகே வயலில் உழுது கொண்டிருந்தபோது ஒரு மண்பானையில் இருந்து ராமரின் மனைவி சீதை உயிர்பெற்றதாக கூறுகிறது இந்து புராணங்கள். ஆகவே, இங்கு சீதாவின் பெயரைச்சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கே பிரச்சாரம் செய்தபோது, ’’மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் சீதா கோயில் கட்டப்படும். சீதாவின் பிறப்பிடமாக சொல்லப்படும் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனவுரா தாம் மந்திர் கோவில் சர்வதேச வழிபாட்டு தலமாக மேம்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதே போன்று இந்த முறையும் வென்றுவிட துடிக்கிறது.
இதே போன்று பீகார் பிரச்சாரத்தில், தலைகீழாக தொங்கவிடுவோம் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் அமித்ஷா.
’’பசுவதையில் ஈடுபடும் நபர்களுக்கு நரகம்தான்’’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். அதே போன்று, ‘’பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்’’ என்று சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குஜராத் நீதிமன்றம்.
பசுவதையில் ஈடுபடுவோர் கொல்லப்படுவார்கள் என்று பாஜக தலைவர்கள் பலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் கொலை சம்பவங்கள் அரங்கேறினபோது, பசு குண்டர்களால் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று எதிர்ப்புகள் அதிகரித்தபோது, பசுபாதுகாப்பு என்கிற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றார் மோடி.
பாஜகவின் இந்த பசுவதை கொள்கை நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ’’பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பசுவதை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வெற்றி பெற்றால் பசுவதை தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டில் பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.
தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, நேற்று பீகாரில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் பேசிய அவர், ‘’இது அன்னை சீதாவின் பூமி. இங்கே பசுக்கடத்தல், பசு படுகொலைகளை அனுமதிக்க மாட்டோம். பசுவதை வழக்குகள் இங்கே அதிக அளவில் இருந்துள்ளன. எங்கள் ஆட்சியில் பசுவதையை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இதுதான் மோடியின் உத்தரவாதம். பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’’ என்று சொல்லி பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
’’பசு மாட்டை கொல்வதையும் அதன் கறியை ஏற்றுமதி செய்வதையும் தடை செய்ய சட்டம் இயற்றுவேன் என்று சொல்லி இருந்தால் கூட ஒரு Logic இருக்கு. அதை விடுத்து இப்படி தலைகீழாக தொங்க விடுவோம் என்று வன்முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு உள்துறை அமைச்சரே பேசுவது இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.’’ என்றும், ”சீதாவின் மண் என்பதால் பசுக்களை பாதுகாப்பார்களாம். ஆனால் சீதாக்களின் கற்பை சூறையாடுபவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம்.’’ என்றும், நெட்டிசன்கள் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றுகின்றனர்.