எதிர்க்குரல்கள் வலுத்த போதிலும் மோடியும், அமித்ஷாவும் அவரது கட்சியினரும் தமிழர்களை திருடர்கள் போல் சித்தரித்து வரும் செயல் தொடர்கிறது. பூரி ஜெகன்நாதரின் கஜானா சாவி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது குற்றம்சுமத்தி வருகின்றனர் பாஜகவினர். அந்த லிஸ்டில் இப்போது ஸ்மிருதி இராணியும் இணைந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தினார் பிரதமர் மோடி. உத்தரப்பிரதேசத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக ஒடிசாவில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் தமிழர்களை இழிவுபடுத்தினார் மோடி.
ஒடிசாவில் அங்குல் நகரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய மோடி, . ‘’நம் வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. அந்த சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மோடியின் இத்தகைய பேச்சுக்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்க்குரல்கள் வலுத்தன.
ஒடிசாவில் பாஜகவுக்கு அதிக ஆதரவில்லையே என்கிற ஆதங்கத்தில், பிஜேடி கட்சி 6வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கப்போகும் நிலையில், அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் உழைப்பு அதீதமாக உள்ளதே என்கிற ஆத்திரத்தில், பாண்டியன் மீதுள்ள ஆத்திரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மோடி இழிவுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று எதிர்க்குரல்கள் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியும் ஒடிசா மக்களிடம் தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.
’’ஒடிசாவின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கிறார்கள்’’ என்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி.
‘’பிஜூ ஜனதா தளம் ஆட்சியானது ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழக ஒப்பந்த தாரர் மூலம் இயக்கப்படுகிறது. ஜல்ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்கினார். அதை தமிழ்நாட்டின் ஒப்பந்ததாரர் கொள்ளை அடித்துவிட்டார். இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிதியும் தமிழ்நாட்டின் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஒடிசா மாநில வளங்களை கொள்ளையடிக்க தமிழக ஒப்பந்ததாரர்கள் இடைவிடாமல் வேலை செய்து வருகிறார்கள். பூரி ஜெயன்நாதரின் கஜானா சாவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏன் மறைத்து வைத்திருக்கிறார்? என்று கேட்டு தமிழ்நாட்டை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
தமிழர்களை கொள்ளைக்காரர்கள் என்று சொல்வதால் பாஜகவுக்கு ஒடிசா கிடைத்துவிடுமா? என்றே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.