என்ன செய்தாலும் 370 சட்டப்பிரிவை யாராலும் மீண்டும் கொண்டு வரமுடியாது. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் நீக்க முடியாது என்று அடித்துச்சொல்கிறார் பிரதமர் மோடி.
குடியுரிமை திருத்த சட்டம் நேற்று முன் தினம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. முதற்கட்டமாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள்ன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் பேசி வரும் நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசியுள்ளார் மோடி.
உத்தரபிரதேச மாநிலத்தின் அசாம்கர், லால்கஞ்ச் பகுதிகளில் நடந்த பிரச்சாரம் கூட்டங்களில் பேசிய மோடி, ‘’குடியுரிமை திருத்த சட்டத்தை அகற்றுவதாக இந்தியா கூட்டணியினர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்கவே முடியாது’’ என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்.
அவர் மேலும், ‘’காஷ்மீரில் நடந்த தேர்தலில் அம்மக்கள் பெருமையுடன் வாக்களித்துள்ளனர். அவர்களின் ஆர்வத்தை பார்த்தால் யாராலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என்பது புரியும்’’ என்று கூறியுள்ளார்.
முன்பெல்லாம் காஷ்மீரில் தேர்தல் நடந்தால் அங்கு போராட்டம் வெடிக்கும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால் மக்கள் வாக்களிக்க பயப்படுவார்கள். 370 சட்டப்பிரிவு நீக்கத்தால் அந்த நிலை மாறி இருக்கிறது. அதனால்தான் முந்தைய வாக்கு சதவீத சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் மார்தட்டுகிறார் மோடி.