தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசின் மூலமாக என்ன திட்டத்தை பெற்று தந்திருக்கிறார் அண்ணாமலை? எதுவுமே கிடையாது. எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளை சொல்லி வாயிலேயே வடை சுடுகிறார். இப்படிப்பட்டவர் பாஜகவில் இருப்பதால்தான் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைத்த பாஜக இப்போது கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்க்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆவேசமானார்.
’’அதிமுக முன்பு இருந்தது போல். சென்னையில் அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டமே வருவதில்லை. கரையான் போல் கரைகிறது அதிமுக. தொடர் தோல்வியை சந்திக்கிறது அதிமுக. சிலரின் சுய லாபத்த்தினால் அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது. சுய லாபத்திற்காக, அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமை சரியில்லாததால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள்.
அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ். இபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி. நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிதான்.
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக 2019ம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தலைமை சரியில்லாததால் அதிமுக பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிச்சாமி எனக்கு அறிவுறை கூறத்தேவையில்லை. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் போட்டியிட்டது ஏன்? ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் இபிஎஸ்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது என்று சொல்லி தேர்தலை புறக்கணித்துள்ளார் இபிஎஸ். 2026 சட்டமன்ற தேர்தலின்போதும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. அப்போது தேர்தலை புறக்கணிப்பாரா இபிஎஸ்? ’’என்று சரமாரியாக எடப்பாடி பழனிச்சாமியை விளாசினார்.