மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியேற்பது என்பது 100 கோடி வாக்காளர்கள் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நிச்சயமாக சாதனைதான். இந்தளவு வாக்காளர்கள் இல்லாத காலத்தில், இந்தியா சுதந்திரம் பெற்றிருந்த நேரத்தில், 1952, 1957, 1962 ஆகிய முதல் 3 தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது மூன்று முறையும் பிரதமரானவர் ஜவகர்லால் நேரு. அவருக்குப் பிறகு, பா.ஜ.க. ஆட்சியின் பிரதமராக 2014, 2019, 2024 எனத் தொடர்ச்சியாக மூன்று முறை பதவியேற்றிருக்கிறார் நரேந்திர மோடி.
ஒவ்வொரு முறை ஆட்சியின் முதல் 100 நாள் கொண்டாட்டங்களை அமர்க்களப்படுத்துவது மத்திய பா.ஜ.க. அரசின் வழக்கம். குறிப்பாக 2019ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிப்பு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கிய 370வது அரசியல் பிரிவு நீக்கம், முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் என சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவற்றைத் தகர்க்கும் சட்டங்களை முன்வைத்து பா.ஜ.க.வின் கொள்கை வழிக் கொண்டாட்டமாக 2019 அமைந்தது. அதனைத் தொடர்ந்து அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியையும் விரைவுபடுத்தினர். இவை போக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த வரிச் சலுகைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவையும் 100 நாள் சாதனைகளாக முன்னிறுத்தப்பட்டன.
மோடி 3.0 ஆட்சியின் 100வது நாளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், அது எப்படி-எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பா.ஜ.க. ஆட்சியால் உறுதிப்படுத்த முடியவில்லை. கடந்த இரண்டு ஆட்சிக்காலங்களைப் போல போல இந்த முறை 100வது நாளில்பா.ஜ.க. விரும்பிய-தனக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டாட முடியவில்லை. கடந்த ஆட்சியின் கடைசி ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 3 குற்ற நடைமுறைச் சட்டங்களைத்தான் தனது ஆட்சியின் பெருமையாக பா.ஜ.க.வால் சொல்ல முடிந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு இடையிலான சர்ச்சையில், மோடி 3.0 அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கூட தனது ஆட்சியின் 100வது நாளில் பெருமையாக சொல்ல முடியவில்லை. காரணம், இதற்கு மோடி அரசு எதிர்பார்த்த வரவேற்பு இந்தத் திட்டத்திற்கு கிடைக்கவில்லை. இதன் மோசமான விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றித்தான் அரசு ஊழியர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அதிகம் வெளிப்படுத்தின.
முத்தலாக் தடைச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநில அதிகாரப் பறிப்பு சட்டம் பாணியில் மோடி 3.0 ஆட்சியில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட பா.ஜ.க. அரசு முனைந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதால் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோலவே, அரசுப் பணிகளுக்கான உயர் அலுவலர்களுக்குரிய இடங்களில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக நியமிப்பது என்ற மோடி 3.0 அரசின் முடிவும் எதிர்ப்பின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு விரும்பாத-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்ற சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டில் மோடி அரசு மறுபரிசீலனைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் காரணம், கடந்த இரண்டு முறை போல பா.ஜ.க.வுக்கு மக்களவையில் தனி மெஜாரிட்டி இல்லாமல் போனதால்தான். மைனாரிட்டி சமுதாயத்தினர் விவகாரங்களிலேயே கவனம் செலுத்தி வந்த பா.ஜ.க. தற்போது மைனாரிட்டி அரசாக இருப்பதால் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியும், அதன் இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடந்த முறைகளைவிட அதிகளவிலான எம்.பி.க்களுடனும் இருப்பதால் மோடி 3.0 அரசால் தன் விருப்பப்படி சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது.
முந்தைய இரண்டு ஆட்சிக்காலம் போல இம்முறையும் 100வது நாள் கொண்டாட்டத்திற்கு பல அமைச்சகங்களையும் ஆயத்தமாக இருக்கச் சொன்ன மோடி அரசால், அப்படியானக் கொண்டாட்டத்தை ஆடித் தீர்க்கமுடியவில்லை. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே முன்வைக்க வேண்டியுள்ளது. மோடி 3.0 பெருமைப்பட முடியாமல் இருக்கலாம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெருமை-வலிமை.