தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிகை 50 சதவிகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் குறைபட்டுக்கொண்டார்.
கட்டணமில்லா விடியல் பயண திட்டம் சென்னையில் நடைமுறையில் இருக்கும் அதே வேளையில் மெட்ரோ ரயில் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றே தரவுகள் காட்டுகின்றன. 2019ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை என்றே தரவுகள் காட்டுகின்றன.
மெட்ரோ ரயிலுக்காக இப்படி புலம்பும் மோடி அதற்காக ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
’’சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்’’ என்று சொல்லும் அவர், ’’கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார் பிரதமர் மோடி. பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.
பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டு கால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்’’என்கிறார்.
கட்டணமில்லா விடியல் பயணம் எனும் தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தால் சுமார் 480 கோடி முறைக்கும் மேல் பயணித்து, மாதம் ரூ.850லிருந்து ரூ.900 வரை சேமித்து பயன்பெறுகிற எளியோர்களின் வாழ்வுநிலை குறித்து அறியாதவராக இருக்கும் மோடி குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
’’மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மோடி உளறுகிறார்’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’10 வருடம் என்ன செய்தோம் என்று சொல்லுவவதற்கு அவரிடம் சரக்கு இல்லை. காலியாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்கிறார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு முன்பு அங்கிருந்த 30 கோயில்களை இடித்தவர் மோடி. இது குறித்து இஸ்துஸ்தான் டைம் பத்திரிகை தெளிவாக எழுதி இருக்கிறது. படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர்கோவில் என்பது மாதிரி 30 கோயில்களை இடித்துவிட்டு ராமர் கோயிலை கட்டினார் மோடி. படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர்கோவில் என்கிற பழமொழி அவருக்குத்தான் பொருந்தும். அவர் இதை பேசலாமா?’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.