
பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர் என்று சொல்லி பாஜக எம்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், மோடியே தான் மனித பிறவியே அல்ல என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் மோடிக்கி சிகிச்சை தேவை என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியிருக்கிறார்.

கடவுளுக்கு நிகரானவர் மோடி என்று பேசி வந்த பாஜகவினர் கவுளுக்கே மேலானவர் மோடி என்று பேச ஆரம்பித்துவிட்டனர். ராமர் குழந்தை வடிவிலும், அவரது கையை பிடித்து மோடி அழைத்துச்செல்லும் புகைப்படம் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே வெளியானது. ராமர் கோயில் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமரின் அவதாரம்தான் மோடி என்றும், மோடியே கடவுள் என்றும் பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, தனது பிரச்சாரத்தின் போது, பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் வலுக்கவே, சம்பித் பத்ரா, வருத்தம் தெரிவித்தார். பூரி ஜெகன்நாதரின் பக்தர் மோடி என்று சொல்லுவதற்கு பதிலாக, தவறுதலாக மோடியின் பக்தர் பூரி ஜெகன்நாதர் என்று சொல்லிவிட்டதாக அந்தர்பல்டி அடித்தார்.
பாஜகவினர் பேசுவது ஒருபக்கம் இருக்கட்டும், மோடியே தன்னை ஒரு அவதாரம் என்றே பேச ஆரம்பித்துள்ளார். தான் உயிரியல் ரீதியாக பிறந்த வளர்ந்தவன் அல்ல என்கிறார்.

’’நான் மனிதப்பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி இருக்கிறார்.
நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்’’என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
மோடியின் இந்த பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஸ்ரீநிவாஸ் மோடியின் இந்த பேச்சை பெயர் குறிப்பிடாமல் சாடியிருக்கிறார். ‘’யாராவது தங்களை அவரதாரம் என்றோ, சிறப்பு படைப்பு என்றோ கருதினால் அவர்களின் மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை.’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
மேலும், ‘’மனிதாக இருப்பது மட்டுமே முக்கியம். மனிதனாக இருப்பதை விட சிறந்தவர்கள் இங்கே யாரும் இல்லை’’என்று குட்டு வைத்திருக்கிறார்.