ஒடிசாவில் பிஜேடி அரசு காலாவதி ஆகிறது. முதன்முறையாக பிஜேபி ஆட்சி அமைகிறது. ஜூன் 10ம் தேதி பிஜேபி முதல்வர் பதவியேற்கிறார் என்று பிரதமர் மோடி அடித்துச்சொல்லி வரும் நிலையில், இது பிஜேபியின் நீண்டகால பகல் கனவு. ஜூன் 9ம் தேதி 6வது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று அவரது ஆதரவாளர் விகே பாண்டியன் உள்ளேன் பதிலடி கொடுத்து வருவது ஒடிசா அரசியலில் பெரும் தகிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தை 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பின்னர், அடுத்து 25 ஆண்டுகள் பிஜேடி ஆட்சி செய்து வருகிறது. இழந்த ஆ ட்சியை மீண்டும் பெற்றுவிடும் முனைப்பில் இருக்கிறது காங்கிரஸ். ஒடிசாவை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டி நிற்கிது பிஜேபி.
மக்களவை தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கிறது ஒடிசா. 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பிஜேடி- காங்கிரஸ் -பிஜேபி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், பிஜேடி 21 மக்களவைத் தொகுதிகளில் 12 இடங்களையும், 147 சட்டமன்றத் தொகுதிகளில் 112 இடங்களையும் வென்றிருந்த நிலையில், பாஜக எட்டு மக்களவை மற்றும் 23 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரசுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒன்பது சட்டசபை தொகுதிகளும் கிடைத்தன.
2024 தேர்தலில் 6வது முறையாக ஆட்சி அமைக்கப்போகிறேன் என்று நவீன் பட்நாயக் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையவிருக்கிறது என்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் சொல்லி வருகிறார்கள். இதற்கிடையில், ஒடிசாவில் முதன்முறையாக பிஜேபி ஆட்சி அமையவிருக்கிறது என்று அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மோடி.
ஒடிசாவில் பெர்காம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’ஜூன் 4ம் தேதியுடன் பிஜேடி அரசு காலாவதி ஆகிறது. ஒடிசாவில் பிஜேபி முதன்முறையாக ஆட்சி அமையவிருக்கிறது. ஜுன் 4ம் தேதிக்கு பின்னர் பிஜேபி சார்பிலான முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளிவரும். ஜூன் 10ம் தேதி அன்று பிஜேபி முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெறும்’’ என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லியது ஒடிசா அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெர்காம்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி மேலும், ‘’நீர்வளம், கனிம வளங்கள் என்று ஏராளமான வளங்கள் இருந்தும் 50 ஆண்டுகள் காங்கிரசும், 25 ஆண்டுகள் பிஜேடியும் அடித்த கொள்ளையால் ஒடிசா வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு நாட்டி உயரிய பதவியை குடியரசுத்தலைவர் பதவியை வழங்கி இருக்கும் பிஜேபி, அவரின் வழிகாட்டுதலில் ஒடிசாவுக்கு என்னால் முடிந்ததை செய்யும்’’ என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருக்கிறார்.
இதற்கு நவீன் பட்நாயக், ‘’ஒடிசாவின் வளர்சிக்கு மோடி அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஒடிசாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பிஜேபியின் நீண்ட கால பகல் கனவு’’ பதிலடி தந்து வருகிறார்.
ஜூன் 10ம் தேதி பிஜேபி ஆட்சி அமைக்கும் பதவியேற்பு விழா என்று மோடி சொல்லி வரும் நிலையில், ஜூன் 9ம் தேதி 6வது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று அவரது ஆதரவாளர் விகே பாண்டியன் பரபரப்பை கூட்டி வருகிறார்.
காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல்காந்தியோ, ‘’காங்கிரஸ்தான் ஒடிசாவில் ஆட்சி அமைக்கப்போகிறது. பிஜேபியும் பிஜேடியும் எதிரிகள் போல் வெளியே காட்டிக்கொள்கிறார்கள். திரைமறைவில் ஒன்றாக இருக்கிறார்கள்’’ என்று கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிஜேபி – காங்கிரஸ் – பிஜேடி இடையே இப்படி மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், ஒடிசாவின் தேர்தல் கள நிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?
ஒரே முதல்வர் தொடர்ச்சியாக இருப்பதால் ஒடிசா வளர்ச்சியடையவில்லை என்று சலிப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலும், பிஜேடியில் அரசியல் முடிவுகளை எடுப்பவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் தான் உள்ளார். அவர்தான் முதல்வர் போல் நடந்துகொள்கிறார். இதனால் பிஜேடியினரே அதிருப்தியில் உள்ளனர். தவிர, ஒடிசாவில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை, சுரங்க தொழில் ஊழல் போன்றவையும் பிஜேடிக்கு அதிருப்தியை தேடித்தரும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
அதே நேரம், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் பிஜேடிக்கு கொஞ்சம் பின்னடவைத் தந்தாலும், கருத்து கணிப்பு முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மோடி மற்றும் அமித்ஷாவின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மக்களவைத் தேர்தலில் 5 முதல் 10 இடங்களையே பிஜேபி பெறும். சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவுதான். ஆனால், 11 முதல் 15 இடங்களை பிஜேடி வெல்லும். சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்கின்றன விமர்சனங்கள். அதே நேரம், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மாநிலத்தில் சரியான தலைவர் இல்லாததால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழக்கிறது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.