தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எதையும் பேசுவார் என்ற குற்றச்சாட்டு மோடி மீது தொடர்ந்து எழுந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் மோடியின் பேச்சும் அமைகிறது. இல்லை என்றால் ஒடிசா மக்களிடம் தமிழ்நாட்டை இழிவுபடுத்திப்பேச வேண்டிய அவசியம் என்ன? பாண்டியன் மீதுள்ள ஆத்திரத்தை தமிழ்நாட்டு மக்களிடம் ஏன் காட்டுகிறார் மோடி? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது தென்மாநிலங்கள் குறித்து கேவலமாக பேசினார் மோடி. உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தினார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக தமிழ்நாட்டை இழிவுபடுத்தி இருக்கிறார்.
தமிழ்மொழியின் சிறப்புகளை கேட்கும்போது நான் தமிழ்மொழியில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார்.
ஒடிசாவில் அங்குல் நகரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை காணாமல் போன விவகாரம் குறித்து பேசினார். ‘’நம் வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. அந்த சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சொல்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
ஒடிசாவில் பிஜேடி கட்சி 6 முறையாக ஆட்சி அமைக்கவிருக்கிறது. பிஜேடி கட்சியில் முக்கிய நபராக உள்ளார் விகே பாண்டியன். அவரின் பெயரைச்சொல்லி விமர்சனம் செய்வதற்கு பதிலாகத்தான் அவர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்பதால் ஒட்டுமொத்தாக தமிழ்நாட்டை இழிவுபடுத்தி இருக்கிறார் மோடி.
மதுரையைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், கடந்த 2000ல் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பஞ்சாப் கேடர் அதிகாரின் ஆனார். 2002ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்து கொண்டு அம்மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நன் மதிப்பை பெற்று 2011ல் அவரின் தனிப்பட்ட உதவியாளரானார். கடந்த ஆண்டு அக்டோபரில் விருப்ப ஓய்வு பெற்று பிஜேடி கட்சியில் இணைந்தார். கட்சி மற்றும் சமூகப்பணிகளால் ஒடிசா மக்கள் இவர் மீது நன்மதிப்பு வைத்துள்ளனர்.
நவீன் பட்நாயக் முதல்வரா? வி.கே.பாண்டியன் முதல்வரா? என்று விமர்சனம் எழும் அளவிற்கு பிஜேடியில் செல்வாக்கு வாய்ந்தவராக உள்ளார் வி.கே.பாண்டியன்.
விகேபி முயற்சியில்தான் பாஜகவுடன் பிஜேடி கூட்டணி பேச்சு நடந்திருக்கிறது. பேச்சில் உடன்பாடு ஏற்படாமல் கூட்டணி அமையவில்லை. இதில் பாஜகவினருக்கு பாண்டியன் மீது கடும் ஆத்திரம் உள்ளது. இதனால் அவரை தொடந்து விமர்சித்து வருகின்றனர். அந்த ஆத்திரத்தில்தான் மோடியும் அவரை விமர்சித்துள்ளார். அதற்கு நேரடியாக அவர் பெயரை சொல்லாமல், மறைமுகமாக தமிழ்நாட்டின் பெயரை சொல்லி மோடி விமர்சித்ததுதான் கடும் எதிர்ப்பலைகள் எழ காரணமாக அமைந்திருக்கின்றன.
சாவி காணவில்லை என்று மோடி சொன்னதற்கு, மோடிதான் சாவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரது விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துவிட்டார் பாண்டியன்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ’’ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்’’ என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும், ‘’ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?
தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!’’ என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஒடிசாவில் பாஜகவுக்கு அதிக ஆதரவில்லையே என்கிற ஆதங்கத்தில், பிஜேடி கட்சி 6வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கப்போகும் நிலையில், அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் உழைப்பு அதீதமாக உள்ளதே என்கிற ஆத்திரத்தில், பாண்டியன் மீதுள்ள ஆத்திரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மோடி இழிவுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்றே கேள்விகள் எழுகின்றன.