நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காததால் கைதுக்கு பயந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களில் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த ஒரு தகவலை அடுத்து அங்கேயும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பிரகாஷ், தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நில சொத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று போலீசில் புகாரளித்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது. இதனால் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில், விஜயபாஸ்கர் தலைமறைவானார். 12 நாட்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
தலைமறைவாக இருக்கும் விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜயபாஸ்கர் சார்பில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி சண்முகசுந்தரம்.
இதையடுத்து 12 நாட்களாக பதுங்கியிருக்கும் விஜயபாஸ்கரை கைது செய்ய தேடியது சிபிசிஐடி. அவர் காஷ்மீரில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் அங்கே விரைந்தனர். வடமாநிலத்தில் அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்லூரியில் பதுங்கியிருக்கிறார் என்ற தகவல் வந்ததை அடுத்து வடமாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகியின் பண்ணை வீட்டில் பதுங்கியிருக்கிறார் என்ற தகவல் வர, அங்கேயும் ஒரு தனிப்படையினர் சென்று தேடி வருகின்றனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பாக முன் ஜாமீன் பெற்றுவிட வேண்டும் என்று, முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யவுள்ளது விஜயபாஸ்கர் தரப்பு.