தமிழநாட்டில் உள்ள சுமார் 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மின் வணிகம் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசின் ‘Fame TN’ நிறுவனம் மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக MSME துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம், வெளிநாடு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலகத்துடன் இணைந்து MSME தொழில் நிறுவனங்களுக்கு Amazon, FlipKart போன்ற மின்வணிக (E-commerce) நிறுவனங்கள் மூலம் எவ்வாறு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஒருநாள் தேசிய கருத்தரங்கை நேற்று நடத்தியது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தமிழக அரசின் MSME துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன என்று கூறினார்.
அண்மைக் காலமாக, மின் வணிகம் மூலமான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் மின் வணிகம் ஏற்றுமதி நடப்பாண்டில் 99 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்தியாவின் மின்னணு வர்த்தகம் 1.29 சதவீதமாகவும் சீனாவின் வர்த்தகம் 53.64 சதவீதமாகவும் உள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் ‘Fame TN’ நிறுவனம் இதுவரை, மாநிலத்தில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை FlipKart நிறுவனம் மூலம் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, என்று செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News Source: Hindu Tamil Thisai