சிவசேனா பிரமுகரின் மகன் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து கணவன் – மனைவி சென்ற டூவீலரில் மோதியதில் மனைவி மரணமடைந்து விட்டார்; கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அந்த பெண்ணை 1.5 கி.மீ. தூரம் இழுத்துச்சென்று 2 முறை அந்தப்பெண்ணின் மீது காரை ஏற்றிவிட்டு சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
மும்பையில் ஒர்லி கோலிவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரதி – காவேரி. மீன் வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன் வாங்குவதற்காக ஸ்கூட்டியில் தென்மும்பை சசூண்டாக் பகுதிக்கு சென்றனர். அப்போது மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்த இளைஞர் ஸ்கூட்டியின் மீது மோதியதில் கணவன், மனைவி இருவருமே தூக்கி வீசப்பட்டனர். நாயர் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துவிட்டார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
போலீசார் விசாரணையில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பால்கர் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர்(24) என்பதும், ஜூகு பகுதியில் உள்ள பாரில் மது அருந்திய அவர், காரில் திரும்பியபோது ஒர்லி பகுதிக்கு வந்ததும் தான் ஓட்டுகிறேன் என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு, மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்ததும், விபத்து நடந்ததும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மிஹிரை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்கவும் நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. அதேநேரம், விபத்து நடந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் போலீசாரை அதிரவைத்திருக்கின்றன.
காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்ணை காரில் 1.5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச்சென்று, பின்னர் அந்த பெண்ணின் மீது 2 முறை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மிகிர் ஷாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம். போலீசார் முறையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.