மும்பை புறநகர் ரயில்களில் பயணிப்பது என்பது போருக்கு செல்வதைப் போன்று உள்ளது என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் டோக்கியோவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பரபரப்பான மும்பை புறநகர் ரயில்வேயில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் உயிரிழப்புகள் நடக்கின்றன. 33.8% ஆக இறப்பு விகிதம் உள்ளது. மும்பையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் அபரிமிதமான வளர்ச்சி இருந்தாலும், ரயில் நிலையங்களில் உள் கட்டமைப்புகள் பழமையானதாகவும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன.
தண்டவாளத்தை கடப்பது, கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளுவில் ரயிலில் இருந்து விழுந்து, பிளாட்பாரம் , ரயில் இடைவெளிகளுக்கு இடையே விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை ரயில்வே நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது. அசாதாரண சம்பவங்கள் என்று எளிதில் கடந்து போய்விடுகின்றது.
மும்பைவாசிகளின் ரயில் பயண அவலங்களில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மும்பையில் கடந்த 2012ம் ஆண்டின் கணக்கின்படி மும்பை புறநகர் ரயில்களில் ஒரு நாளைக்கு 40 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணிக்கின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டில் கூட்ட நெரிசல், ரயில் விபத்துகளில் சிக்கி 2,590 பேர் உயிரிழந்தனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று
மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி அமித் போர்கார் அமர்வு விசாரித்து வந்தது.
விசாரணைக்கு பின்னர், ‘’மும்பை புறநகர் ரயில்களின் பயணம் செய்வது, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வது என்பது போருக்கு செல்வதைப் போல் உள்ளது’’ என்று வேதனை தெரிவித்தனர். ‘’ரெயில்களில் ஆடு, மாடுகளைப் போல், அதைவிடவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இது வெட்கக்கேடானது. இந்த நிலையைப்பார்த்து நான் வெட்கப்படுகிறேன். இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.
இது ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பு, கடமை. பொதுமக்களின் உயிரைக்காக்க உத்தரவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக மேற்கு, மத்திய ரயில்வே நிர்வாகங்களின் பொது மேலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளனர்.