திராவிட மாடல் அரசு என முதலமைச்சரால் குறிப்பிடப்படும் தி.மு.க. ஆட்சியில் பழநியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்த இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். ஆதீனத் தலைவர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், ஆய்வாளர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக வாழ்த்துகளை வழங்கினார்.
தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி நிலத் தலைவனாகக் குறிப்பிடப்படும் முருகன், தமிழ்நாட்டில் அறுபடை வீடு கொண்ட கடவுளகாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்யும் எளிய பக்தர்களின் கடவுளான முருகனுக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உண்டு. உலக நாடுகளிலும் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள் அங்கு வசிக்கும் தமிழர்கள். அனைத்துலக முத்தமிழ் மாநாட்டின் நோக்கம் முருகன் வழிபாட்டையும் தமிழ்ப் பண்பாட்டையும் இணைப்பதாகும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
பழநியில் நடந்த முருகன் மாநாட்டிற்கான விளம்பரங்கள் மூலமாக பக்தர்கள் அங்கு திரளாக கூடிய நிலையில், தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வெளிப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மதச் சார்பற்ற அரசு இது போன்ற மத நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை சார்பில் முருகன் மாநாடு நடத்தலாம். அதில் அந்தத் துறை அமைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பங்கேற்கக்கூடாது. ஏனெனில், அது மதச்சார்பின்மைக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிடும். அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டபோதும் இதே காரணத்திற்குத்தான் எதிர்த்தோம்” என்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி,, “முருகன் உள்ளிட்ட தமிழ்க் கடவுள்களை ஏற்கனவே இந்துத்வா தன் வசமாக்கிவிட்டது. மதம் சார்ந்த உலகளாவிய மாநாடு வகுப்புவாதத்தைத்தான் உருவக்கும். தற்போதைய சூழலில், மதச்சார்பின்மையின் தமிழ் அடையாளமாக முருகன் இல்லை. இந்திய அளவிலான இந்து மத அடையாளமாகவும், சைவ சமயத்தின் தெய்வமாகவும், சமஸ்கிருதமயப்படுத்தப்பட்டும் வழிபடப்படுகிறார். சங்க இலக்கியத்தில் முருகனுக்கு இறைச்சி படைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முருகன் கோவில்களில் இறைச்சிப் படைப்பது சாத்தியமல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் வளர்த்த சைவ ஆதீனங்கள் செங்கோலைப் பிரதமரிடம் கொடுக்கின்ற காலகட்டத்தில், ஆதீனங்களும் பிராமணரல்லாத அர்ச்சகர்களையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை முருகன் மாநாட்டின் மூலமாக மீட்டுவிட முடியுமா என்றும் ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களைக் கடந்து, பழநியில் முருகன் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க.வின் திராவிட மாடல் அரசு. தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் பழநியில் நடந்த மாநாட்டில் திரளாகப் பங்கேற்றனர். ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டும், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசையரங்கம், நாட்டிய நாடகம் போன்றவை நிகழ்த்தப்பட்டும் முத்தமிழ் முருகன் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்பட்டாலும் அந்தத் துறை தமிழ்நாடு அரசின் துறை என்பதால், முதலமைச்சர் என்ற முறையில் காணொளி வாயிலாக வாழ்த்திய மு.க.ஸ்டாலின், “எல்லாருடைய நம்பிக்கைகளையும் மதிக்கின்ற அரசாக இது இருக்கிறது” என்பதைத் தெரிவித்திருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதையும், டிஸ்னிலேண்ட் போன்ற இடங்களை அவர்கள் பார்த்து மகிழ்வதையும் முதலமைச்சர் எப்படி அக்கறையெடுத்து செயல்படுத்துகிறாரோ அதுபோல அவரது அரசின் அறநிலையத்துறையின் பங்களிப்பை விளக்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் உதயநிதியும் அதே கருத்துகளுடன் வாழ்த்தி இருக்கிறார்.
மதவாத அரசியல் மூலம் பக்தர்களைத் திசை திருப்பும் போக்குத் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சூழலில், மதநல்லிணக்க நிகழ்வுகள் தேவைப்படுகின்றன என்கிறார்கள் பக்தியையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கக்கூடியவர்கள். அரசியல் கட்சியின் சார்பிலான நிகழ்வாகவோ, முதலமைச்சரே வேல் எடுத்துக்கொண்டு மேடையில் ஏறும் நிகழ்வாகவோ இல்லாமல், துறை சார்ந்த நிகழ்வுகளை நடத்தி பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்குத் துணை நிற்பதும் அறம் சார்ந்த அரசியல்தான் என்பது இவர்களின் கருத்து.