மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிரான அரசியல் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கு டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 பிப்ரவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை வெளியேற்றி மியான்மரில் ராணுவம் ஆட்சியை பிடித்ததன் விளைவால், அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால், மியான்மருடன் 1,650-கிமீ தூர எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் நலன்களை சீர்குலைக்கும் அபாயத்திற்கு உட்படுத்தும் அச்சுறுத்தல்களும் நிலவி வருகிறது.
இந்நிலையில், மியான்மர் ராணுவ எதிர்ப்பு கிளர்ச்சிப் படைகளுக்கும் மியன்மரின் நாடு கடந்த அரசாங்கமான (Government-in-Exile) தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கும்(NUG) டெல்லிக்கு வருகை தர இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய எல்லையில் உள்ள மியான்மரின் சின், ரக்கைன் மற்றும் கச்சின் ஆகிய மாநிலங்களில் உள்ள சிறுபான்மை இன கிளர்ச்சியாளர்களையும் கருத்தரங்கிற்கு இந்தியா அழைத்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இந்த கருத்தரங்கை மத்திய அரசின் இந்திய உலக விவகார கவுன்சில் (ICWA) நடத்த உள்ளது.
இந்திய உலக விவகார கவுன்சிலின்(ICWA) தலைவராக குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர், துணை தலைவர்களாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
“அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“கருத்தரங்கிற்கு நாங்கள் பிரதிநிதிகளை அனுப்பப் போகிறோம் என்றும் மியான்மரின் அரசு சாரா அமைப்புகளை இந்தியா அணுகுவது இதுவே முதல் முறை என்றும்”, மியான்மர் கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றான சின் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் சுய் கர் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டில் உள்ள மேற்கத்திய நாடுகள், பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் நிலையில், மியான்மர் ராணுவத்துடம் ஒரு இணக்கமான போக்கையே இந்தியா கடைபிடித்து வந்தது.
இராணுவ ஆட்சிக்கு எதிரான நிலைபாடுகளை இந்தியா எடுத்தால், அது மியான்மர் ராணுவ தளபதிகளை சீனாவுடன் நெருக்கமாக செல்வதற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
மியான்மரின் ஸ்திரத்தன்மை இந்தியாவிற்கும் அதன் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மிக முக்கியமானது; குறிப்பாக கலடன் மல்டி-மாடல் டிரான்சிட் டிரான்ஸ்போர்ட் திட்டம் (KMTTP) போன்ற மியான்மருடனான இந்தியாவின் இணைப்பு திட்டம் சீனாவின் செல்வாக்கை குறைக்கவும், வடகிழக்கு இந்தியாவின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான அரசியல் மற்றும் கிளர்ச்சி அமைப்புகளுக்கு இந்தியாவின் இந்த திடீர் அழைப்பு மிகவும் உற்று நோக்க வேண்டியுள்ளதாக அமைந்துள்ளது.