புதுவையில் முடிவுக்கு வருகிறது NDA கூட்டணி. தனது அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் ஜெ.பி. நட்டாவிடம் சரமாரி புகார் சொன்னதன் எதிரொலியாக பாஜகவுடனான கூட்டணியை துண்டித்துவிட முடிவு செய்துள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. இதை அறிந்த பாஜகவினர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமிதான் முதல்வராக இருந்து வருகிறார். இந்த கூட்டணி ஆட்சி முன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒன்றரை ஆண்டுகள் மீதம் இருக்கும் நிலையில் கூட்டணி முறியும் அளவிற்கு மோதல் முற்றியிருக்கிறது.
அமைச்சர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும், வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் என்று சொல்லி ரங்கசாமிக்கு எதிராக எழுந்திருகிறார்கள் பாஜக எம்.எல்.ஏக்கள். இது தெரியவந்ததும், எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என்ற ரங்கசாமியின் சமாதானத்தை ஏற்க மறுத்த பாஜக எம்.எல்.ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பா.அங்காளன், சிவசங்கரன், ஸ்ரீநிவாஸ், வெங்கடேசன், அசோக் அனைவரும் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது ரங்கசாமிக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்திருக்கிறது. பாஜகவால் மாநிலத்திற்கு ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. துணைநிலை ஆளுநரும் இணக்கமாக செயல்படுவதில்லை. நியமன எம்.எல்.ஏ., ராஜ்யசபா எம்.பியையும் பறித்துக்கொண்டது பாஜக. இந்த நிலைமையில் இப்படி ஒரு பிரச்சனை எல்லாம் தேவையில்லாதது. இத்தனை நெருக்கடிக்கு இடையில் கூட்டணியை கைவிடுவதுதான் சரியானது என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் ரங்கசாமி.
அதேநேரம் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டால் ஆட்சி கலையும். அதற்கு இடங்க்கொடுக்க கூடாது என்றுதான் எதிர்க்கட்சிகள், சுயேட்சைகளுக்கு ரகசிய தூது அனுப்பி இருக்கிறாராம் ரங்கசாமி. இதைக்கேட்டு பதறிப்போன பாஜகவினர் ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.