நட்டாவை சந்தித்து முறையிட்டும் ரங்கசாமி வழிக்கு வராததால் புதுச்சேரி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தோல்வியால் ரங்கசாமி மீது அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 7 பேர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து முறையிட்டனர்.
அவர்கள் டெல்லி செல்வதற்கு முன்பே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் ரங்கசாமி சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்காததால் ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார்.
அமித்ஷாவிடம் முறையிட்டதால், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்து நிலைமையை சரி செய்ய முற்பட்டார். அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ஆலோசனை நடத்திய அவர், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
தன்னை ஓரங்கட்டிவிட்டு, பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு ஆள் அமர்த்த சதி நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட ரங்கசாமி, சந்திப்புக்கு நேரம் கொடுக்கவே இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள், ரங்கசாமி ஆட்சியில் ஊழல் அதிகம் நடக்கிறது. கூட்டணியையும் மதிக்கவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று மேலிடம் பொறுப்பாளரிடம் கூறியிருக்கிறார்கள். அவரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவிடம் முறையிட உள்ளார்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.