
சென்னையில் கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் நடந்த உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கத்தின் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கூட்டணி சேர்ந்தால் வெல்லலாம். தனித்து நின்றால் வெல்ல முடியாதே என்று கருத்தரங்கில் சிலர் சொன்னபோது, ’’தத்துவமில்லாமல்தான் வெல்ல முடியாதே தவிர தனித்து நின்று வெல்ல முடியாதுன்னு ஒண்ணும் இல்ல.
இறைமகன் இயேசு சாட்சியாக சொல்கிறேன்; தனித்து நின்று இந்த மகன் வெல்வேன். முதலில் நான் தனித்து நிற்கிறேன் என்று யார் சொன்னது? 36 இலட்சம் மக்கள் வாக்களித்து நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கும் போது நான் எப்படி தனித்து நிற்கிறேன் என்று சொல்ல முடியும்’’ என்று கேட்டார் சீமான்.

தவெகவுடன் நாதக இணைந்து செயல்படலாமே? என்ற கேள்விக்கு, ‘’ஒரு சித்தாந்தத்தோடு சினிமா வந்து சேருவது சரி. ஆனா, ஒரு சினிமாவோடு உயரிய சித்தாந்தம் போய் சேருவது சரியாக இருக்காது. பிரபாகரன் எனும் பெருந்தலைவனை தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு தலைவனை இன்னொருத்தவரோடு போய் நிற்கச் சொன்னால் சரியாக இருக்காது.
வேணும்னா, எங்களை ஏத்துக்கிட்டு எங்களோடு வாங்க. அவர் வரணுமுன்னா முதல்ல பெரியார விட்டுட்டு வரணும். பெரியார் கொள்கை வழிகாட்டின்னா பெரியாரின் எந்தக் கொள்கையை ஏற்கிறீர்கள்னு கேட்டா விளக்கம் சொல்லணும்’’ என்றார் சீமான்.

தவெக தொடங்குவதற்கு முன்பாக நாதக சீமானுடன் பலகட்ட ஆலோசனைகளை செய்திருக்கிறார் விஜய். கட்சி தொடங்கிய பின் கொள்கை மற்றும் நாற்காலி பிரச்சனையால் இருவரும் வெவ்வேறு பாதைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த இருவருமே ஆர்.எஸ்.எஸ். இயக்கும் இரண்டு தனித்தனி கம்பெனிகள் என்று விமர்சிக்கிறார் விசிக வன்னியரசு. சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்க விஜய் இயக்கப்படுகிறார். திமுகவின் எதிர்ப்பு, அதிருப்தி வாக்குகளை பிரிப்பதற்காக சீமான் இயக்கப்படுகிறார் என்கிறார் வன்னியரசு.