செல்ஃபி மற்றும் ஆட்டோகிராப் தொல்லைகளில் இருந்து விடுபடவே சென்னை திருவான்மியூரில் தவெக சார்பில் நடந்த 2வது ஆண்டு கல்வி விருது விழா அரங்கத்திற்குள் செல்போன் மற்றும் டோட்புக், பேனாவுக்கு அனுமதி மறுத்துள்ளார் விஜய்.
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது மாதிரியே, ’’இது அதற்கான மேடை அல்ல’’ என்று சொல்லிக்கொண்டே, அதாவது அரசியல் பேசும் மேடை அல்ல என்று சொல்லிக்கொண்டே ’அரசியல்’ பேசினார் விஜய். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். இப்போது உங்களின் கவனம் எல்லாம் அதில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, படிக்கும்போதே அரசியல் கற்க வேண்டும். எது அரசியல் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். ஒரு செய்தித்தாளில் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக வரும் செய்தி, இன்னொரு செய்தித்தாளில் கடைசிப்பக்கத்தில் சின்னதாக கூடம் இடம்பெறாது. இந்த அரசியலை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்ன விஜய், போதைப்பொருள் விவகாரத்தில் ஆளுங்கட்சியை விமர்சித்துவிட்டு, விமர்சிக்காதது மாதிரியே நழுவினார். ஒருவகையில் இது ரஜினி ஸ்டைல் மாதிரியே இருக்குது.
ஆரவாரத்துடன் விழா மேடைக்கு வந்து கையசைத்த விஜய், பின்னர் கீழே இறங்கிச்சென்று நேராக மக்கள் பகுதிக்கு சென்று, ஒரு மாணவர் அருகில் அமர்ந்துகொண்டார். இதில் அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. அடுத்ததாக எழுந்து சென்று கூட்டத்தின் நடுவே ஒரு மாணவி பக்கம் அமர்ந்து பேசினார். அப்போதும் அரங்கத்தினர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
இதுவெல்லாம் விஜய்யின் பக்கா அரசியல் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. கூட்டத்தில் அத்தனை பேர் இருக்க, இஸ்லாமிய மாணவி பக்கத்தில் விஜய் அமர்ந்ததும், மாணவர் சின்னத்துரை பக்கத்தில் அமர்ந்ததும் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதே கூட்டத்தில் மற்ற மாணவ, மாணவிகளுடன் அடுத்தடுத்து அமர்ந்து பேசினாலும் இஸ்லாமிய பெண் அருகில் சென்று அவர் அமர்ந்து பேசிய பக்கா அரசியல் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னதுரை, வள்ளியூரில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்களின் சாதிய தாக்குதலால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பின்னர் விவரம் அறிந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அந்த மாணவர்களை எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்னதுரையை, வீடு புகுதி அரிவாளால் சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த தங்கையையும் அரிவாளால் தாக்கின. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 மாதங்கள் சிகிச்சை பெற்று நலம் பெற்றனர். இத்தனைக்கு இடையிலும் விடாமல் படித்ததில், மனிதநேயத்துடன் மருத்துவமனைக்கே சென்று ஆசிரியர்கள் பாடம்போதித்ததில், பொதுத்தேர்வு முடிவில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதித்தார் சின்னதுரை.
பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னதுரையின் உயர்கல்விக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.
சின்னதுரை பாதிக்கப்பட்டபோதும், வெற்றி பெற்றபோதும் பல்வேரு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நேரிலும் பல்வேறு வகையிலும் ஆறுதலும் உதவிகளும் செய்தனர். அப்போதெல்லாம் இதுகுறித்து எந்த கருத்துமே சொல்லாத விஜய், உதவிகள் செய்யாத விஜய், இப்போது மட்டும் அவரை அழைத்து பாராட்டி விருது வழங்கி அவர் அருகிலேயே சென்று அமர்ந்தது ஏன்? இது விஜய்யின் பக்கா அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.