சென்னையில் ரோகிணி, ஐ ட்ரீம் தியேட்டர்களை அடுத்து கோவையில் அரசன் தியேட்டரிலும், தற்போது கடலூரில் நியூ சினிமா தியேட்டரிலும் நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் அநீதி தொடர்கிறது.
கடந்த 2023ம் ஆண்டில் சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் சிம்பு நடித்த பத்து தல படம் பார்க்க சென்ற நரிக்குறவ பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தியேட்டர் நிர்வாகம். கண்டபடி திட்டி அப்பெண்ணை வெளியே அனுப்பி விட்டது.
’’பலமுறை டிக்கெட் எடுத்துக்கொண்டு நாங்கள் உள்ளே சென்ற போதும், டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு துரத்துகிறார்கள்’’ என்று அப்பெண் கண்ணீர் வடிக்க, அங்கிருந்தவர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் தட்டிக்கேட்க, இது வீடியோவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனம் எழ, பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க, தியேட்டர் நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
அதே கடந்த 2023ம் ஆண்டில் கோவை சுந்தராபுரம் போத்தனூர் சாலையில் உள்ள அரசன் திரையரங்கில் ஜிகர்தண்டா படம் பார்ப்பதற்காக ஈச்சனாரி பகுதியில் வசித்து வந்த நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் சென்றனர். தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு டிக்கெட் தர மறுத்தது. ஆன்லைனிலும் டிக்கெட் கவுண்டரிலும் காலை 11 மணி காட்சிக்கு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது என்று தியேட்டர் நிர்வாகம் காரணம் சொன்னது. வேண்டுமானால் இரவு 10 மணி காட்சிக்கு வாருங்கள் என்று அலட்சியமாக பதில் சொன்னது தியேட்டர் நிர்வாகம்.
’’டிக்கெட் கொடுங்க. கீழே உட்கார்ந்தாவது படம் பார்க்கிறோம்’’ என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டும் டிக்கெட் கொடுக்கவில்லை தியேட்டர் நிர்வாகம். இதனால், ‘’ நாங்க என்ன தப்பு செஞ்சோம்… நாங்க மனுசங்க இல்லையா?’’ என்று ஆவேசப்பட்ட நரிக்குறவ மக்கள் மாலை வரை டிக்கெட்டுக்காக காத்திருந்தனர். இது அப்போது சமூக வலைத்தளங்களில் பரபரபாக பேசப்பட்டது. விவகாரம் பெரிதானதை அடுத்து தியேட்டர் நிர்வாகம் அந்த 40 பேரையும் அழைத்து சமாதானப்படுத்தி இரவு 7 மணி காட்சிக்கு டிக்கெட் கொடுத்தது.
சென்னையிலேயே அதே 2023ம் ஆண்டில் சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள ஐட்ரீம் தியேட்டரில் நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் இல்லை சொல்லிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள். ’’நாங்களும் பணம் கொடுத்துதானே டிக்கெட் கேட்கிறோம். எங்களுக்கு ஏன் டிக்கெட் தர இல்லை என்று சொல்லுறாங்க?’’ என்று வேதனையுடன் திரும்பியிருக்கிறார்கள் அம்மக்கள்.
இந்நிலையில் தற்போது கடலூர் நியூ சினிமா தியேட்டரில் ’கருடன்’ பார்க்கச்சென்ற நரிக்குறவ (Narikuravar) நாடோடி பழங்குடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினர் 30 பேர் ஊர் ஊராக சென்று பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் தியேட்டர் வாசலில் இருந்தவர்களுக்கு கடைசி வரை டிக்கெட் வழங்க முடியாது என்று வாக்குவாதம் செய்திருக்கிறது தியேட்டர் நிர்வாகம்.
இந்த விவகாரத்தில், நாடோடி பழங்குடிகள் சுத்தமாக வராததால் அனுமதி மறுத்துவிட்டதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் தியேட்டர் உரிமையாளர் பதில் சொல்லி இருப்பதுதான் அதிர்ச்சியடைய வைக்கிறது.
இதையடுத்து அம்மக்கள் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் அந்த புகாரை கடலூர் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த 30 பேரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கச்சொல்லி காத்திருந்ததால் முதற்கட்ட விசாரணை தொடங்கியதை அடுத்து, 30 பேரில் 20 பேருக்கு டிக்கெட் தர சம்மதித்திருக்கிறது தியேட்டர் நிர்வாகம்.
பழங்குடியின மக்களுக்கு எதிரான இந்த அநீதி தொடர்வது வேதனை.