ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்ட நயன்தாராவின் திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. ஆனால் ஒரு ரூபாய் கூட அவர் செலவு செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் அவருக்கு 25 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைத்தது.
கரும்பு திண்ண கூலியா? என்பது போன்றுதான் திருமணம் செலவும் இல்லாமல், கூலியும் கிடைத்தது. நயன்தாராவின் அத்தனை பிரம்மாண்டமான திருமண செலவுகளை செய்து, அவருக்கு அத்தனை கோடி ரூபாய் சம்பளமும் கொடுத்தது நெட் பிலிக்ஸ் நிறுவனம்.
கடந்த 2015ம் ஆண்டில் நானும் ரவுடிதான் படத்தின் போது நயன் தாராவுக்கும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்குப் பின்னர் 9.6.2022ல் திருமணம் செய்துகொண்டனர்.
மகாபலிபுரம் கடற்கரை சாலையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இந்த பிரம்மாண்ட திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக கடற்கரையை ஒட்டி கண்ணாடி மாளிகை போன்ற அரங்களுகள் அமைக்கப்பட்டிருந்தன.
நயன்தாராவின் திருமணத்தை நெட்பிலிக்ஸ் தனது ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து அதற்கேற்ற வகையில் இந்த திருமணத்தை வடிமைத்தது. மணமக்கள் மட்டுமல்லாது விருந்தினர்களுக்கும் மேக்கப் செய்ய மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வந்திருந்தனர். விருந்தினர்கள் அனைவருக்கும் ஆடையினையும் நெட்பிலிஸ்க் கவனித்துக்கொண்டது.
நயன் தாராவின் திருமண உடைகள் பல லட்சங்கள். 20 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இத்திருமணத்திற்கு வந்திருந்தனர்.
இத்திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப நயன்தாராவுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்தது நெட்பிலிக்ஸ் என்று தகவல்.
நெட் பிலிக்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்தில் வெளியிட இருந்ததால் திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை.
நயன்தாராவின் இந்த திருமண நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் காண ரசிகர்களும் அப்போது ஆர்வமாக இருந்தனர். ஆனால், இன்று வரையிலும் அந்த நிகழ்ச்சி நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வரவேயில்லை.
திருமணத்தின் போது சிலர் போட்டோக்கள் எடுத்து வெளியிட்டுவிட்டனர். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி நெட் பிலிக்ஸ் அந்த வீடியோவை வெளியிட மறுத்துவிட்டது என்று அப்போது தகவல் பரவியது. ஆனால், அந்த திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று இப்போது தகவல் பரவுகிறது.
அந்த திருமண நிகழ்ச்சியை எடிட் செய்யும்போது நானும் ரவுடிதான் படத்தின் பாடல்கள், இசையை பயன்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதுமட்டுமில்லாமல் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட பல காட்சிகளையும் இந்த திருமண ஆல்பத்தில் சேர்த்திருந்தாராம். இதனால் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி வாங்கித்தருமாறு விக்னேஷ் சிவனிடம் சொல்லி இருக்கிறது நெட் பிலிக்ஸ்.
என்ன காரணமோ தெரியவில்லை, இன்று வரைக்கும் அதற்கு சம்மதம் சொல்லாமல் மவுனம் காக்கிறாராம் தனுஷ்.