நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது பாஜக. இதில் அமைச்சரவையை பங்கிட்டுக்கொள்வதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டா போட்டி எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு இலாகாவிற்கு 3 கட்சிகள் போட்டா போட்டி போடுவதால் கூட்டணிக்குள் கடும் பரபரப்பு நிலவுகிறது.
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி, ஜனசேனா உள்ளிட்ட கூட்டணியில் இருக்கும் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தர முடிவெடுத்துள்ளது பாஜக.
உள்துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்டு தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுக்கு நிபந்தனை விதித்திருகிறது.
ரயில்வே மற்றும் தொழில்துறையை தங்கள் வசம் வைத்திருக்க பாஜக விரும்பும் நிலையில், 12 எம்பிக்களை வைத்திருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2 கேபினெட் இலாகாக்களை குறி வைத்திருக்கிறது. ரயில்வே மற்றும் வேளாண் துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கோரியுள்ளார். அது மட்டுமல்லாமல் சபாநாயகர் பதவியையும் தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரியுள்ளார் நிதிஷ்குமார்.
வேளாண் துறை பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் (குமாரசாமி ) ஆகிய 3 கட்சிகள் தங்களுக்கு வேளாண் துறை வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடாகா, பீகார் மாநிலங்கள் விவசாயத்தையே அதிகம் நம்பி இருக்கும் மாநிலங்கள் என்பதால், வேளாண் துறை தங்கள் கையில் இருந்தால் தங்கள் மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை இன்னும் வளர்ச்சியடையச் செய்யலாம் என்கிற நோக்கில் வேளாண் துறையை தெலுங்கு தேசமும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் அத்துறையை கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன என்று தகவல்.
கூட்டணிக்கட்சிகளின் இந்த அழுத்தத்தால் பாஜக விழிபிதுங்கி நிற்கிறது. அனேகமாக இன்று மாலைக்குள் யாருக்கு அந்த இலாகா? என்கிற முடிவு எட்டப்படும் என்கிறது டெல்லி தகவல்கள்.
இலாகா ஒதுக்கீடு முடிவடையாததால் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மோடியின் பதவியேற்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.