
neet
சட்டையில் அதிகமாகப் பொத்தான்கள் இருப்பதற்கும் மருத்துவப் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமில்லை. ஆனாலும், மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும்போது, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பட்டன்கள் இருந்தன என்பதற்காக அவற்றை வெட்டி எடுத்துவிட்டு, உள்ளே அனுப்பியிருக்கிறார்கள்.
நூறாண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. சமஸ்கிருதத்தையும் அந்த மொழியில் உள்ள வேதங்களையும் எல்லா சமுதாயத்தினரும் படித்து விடமுடியாது. குறிப்பிட்ட சிலருக்கே இன்றளவும் அதில் உரிமை இருக்கிறது. அப்படியென்றால், அன்றைய சூழலில் யாரால் மருத்துவப் படிப்பு படித்து டாக்டராகியிருக்க முடியும்? தமிழிசை சவுந்திரராஜன் போன்றவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அவர்களால் டாக்டராகியிருக்க முடியாது.
சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி தனது ஆட்சியில் இந்த சமஸ்கிருத விதிமுறையை நீக்கியதாலும், வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்ததாலும், அதன்பிறகு அது படிப்படியாக வளர்ந்து 69% இடஒதுக்கீடு என்கிற நிலைக்கு வந்திருப்பதாலும்தான் தமிழிசை சவுந்திரராஜன் போன்றவர்கள் தமிழ்நாட்டில், மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படித்து டாக்டராக முடிந்தது. தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவத் தலைநகராகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் படித்த டாக்டர்கள் உலகின் பல நாடுகளிலும் வல்லுநர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், நீட் தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு வலிந்து திணித்தது. அதற்கு முன், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைந்திருத்த போதும் அது நடைமுறைக்கு வரவில்லை. அத்துடன், மாநிலங்களின் விருப்பத்திற்கு விடப்பட்டது. தமிழ்நாடு அதற்குத் தடை பெற்றது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் சங்கல்ப் அமைப்பு தொடர்ந்த வழக்கில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாங்கள் நீட் தேர்வை நடத்தத் தயார் என வாக்குமூலம் அளித்ததால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்துவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் அப்போதைய பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும்தான்.
முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரையும் கூட நீட் தேர்வுக்கு தமிழ்நாடு விலக்கு பெற்றிருந்தது. அவர் உடல்நலன் குன்றி மருத்துவமனையில் இருந்தபோதுதான் பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அரசு நீட் தேர்வுக்கு ஒப்புக்கொண்டது. தமிழிசை சவுந்திரராஜன் டாக்டராவதற்கு கிடைத்த வாய்ப்பு, கிராமத்தில் படித்து +2வில் அதிக மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு கிடைக்கவில்லை. நீட் தேர்வு அவரது மருத்துவக் கனவை சிதைத்ததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அனிதாவைத் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகிவிட்டன.
பா.ஜ.க. தரப்பிலோ, நீட் தேர்வு என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைக் குறைப்பதற்காகத்தான் என்றும், தி.மு.க.வினர் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதால்தான் எதிர்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. தி.மு.க.வும் கல்வியாளர்களும் எதிர்ப்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் தேர்வையல்ல, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கானத் தேர்வுக்குத்தான் விலக்கு கேட்கிறார்கள். அதற்காகத்தான் அ.தி.மு.க ஆட்சியிலும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, அதை பா.ஜ.க. அரசு கிடப்பில் போட்டது. தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கால் முடக்கப்பட்டு, கடைசியில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பின் சேர்க்கை நியாயமாக நடைபெறும் என்பதுதான் பா.ஜ.க.வின் பிரச்சாரம். ஆனால், +2 முடித்தவர்கள் ஒரே வாய்ப்பில் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் குறைவு. இரண்டு, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து எழுத வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் கோச்சிங் சென்டரில் படிக்க வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இந்தியா முழுவதுமுள்ள அந்த கோச்சிங் சென்டர்கள் பெரும்பாலும் பா.ஜ.க.வின் ஆதரவாளர்களால் செயல்படுத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டரில் பயில்பவர்களின் மரண மர்மங்கள் தனி ரகம்.
தேர்வுக்கான மையங்களில் குளறுபடிகள், வினாத்தாள்களை முன்கூட்டிய வெளியிட்டு மோசடி, விடைத்தாள்களைத் திருத்துவதில் முறைகேடு, தேர்வு எழுதுபவர்களில் ஆள்மாறாட்டம் என நீட் தேர்வின் அத்தனை வில்லங்கங்களையும் உச்சநீதிமன்றம் குழு அமைத்து விசாரிக்கக்கூடிய அளவிற்கு பா.ஜ.க. அரசின் நிர்வாகம் மோசமான நிலையில் உள்ளது.
சி.பி.ஐ. மற்றும் தேசிய தேர்வு முகமையின் விசாரணையின்படி, நீட் தேர்வு எழுதி டாக்டர்களான 26 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களின் 14 பேரின் மோசடி உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு நியமனம் கூடாது எனவும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் கொடூரத்தின் விளைவுகள் இப்படித்தான் உள்ளன.
இந்த நிலையில்தான், கடந்த ஞாயிறன்று இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்தது. சட்டை பட்டனை வெட்டுவது, தாலி-மூக்குத்தி-கம்மல் ஆகியவற்றை அவசரமாகக் கழற்றச் சொல்வது, காவல்துறையினர் ஓடிவந்து உதவி செய்ததால் கடைசி நொடியில் தேர்வு அறைக்குள் நுழைவது எனப் போர்க்களச் சூழல் போல நீட் தேர்வு ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கொரு என்டே இல்லையா?