
என்னதான், ’நீட் நீட்டாக நடந்தது’ என்று பாஜக பிரமுகர் தமிழிசை சமாளித்தாலும் நீட் தேர்வின் கெடுபிடிகள் பல்வேறு அலங்கோலத்தையே ஏற்படுத்தி இருக்கின்றன என்றே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த நீட் தேர்வில் 1.50 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு முறை நீட் தேர்வின் போதும் மாணவ, மாணவிகள் இடையே காட்டப்படும் கட்டுப்பாடுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. அரைஞாண் கயிற்றை எல்லாம் அறுத்துவிட்டு உள்ளே அனுப்பப்பட்டனர் மாணவர், மாணவிகள். மாணவிகளின் ஜடைப்பின்னலுக்கும் அனுமதியில்லை. இதனால் தலைவிரி கோலமாக தேர்வு எழுத சென்றனர் மாணவிகள். மூக்குத்தி, மெட்டி, கொலுசு போன்றவையும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. மாணவிகளுக்கு இப்படி என்றால் மாணவர்களுக்கு பேண்ட் பெல்ட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை.
ஒரு மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவற்றை வெட்டிவிட்டனர். அப்படியும் சந்தேகப்பட்டு அவரை அனுமதிக்கவில்லை. இதனால் பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை தனது பைக்கில் அழைத்துச்சென்று புது சுடிதார் வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து தேர்வெழுத வைத்தார். இதில் திருவாரூர் மாவட்டத்தில் நடந்ததுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 1481 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் நீர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் ஒன்றரை மணிக்கு வந்த மாணவி தாலி அணிந்திருந்ததால் அவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதி வழங்காததால் தன்னுடைய தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு தேர்வெழுத சென்றார்.

நீட் தேர்வின் அர்த்தமற்ற இது போன்ற கெடுபிடிகளால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
’’இந்த விதிமுறை எல்லாம் வரலாறு காணாத அத்துமீறல். இது மிகப்பெரிய துர்பாக்கிய நிலை’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இத்தனை களேபரங்கள் நடந்து வரும் நிலையில், ‘’நீட் தேர்வு நீட்டாக நடந்தது’’ என்று சொல்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
நீட் தேர்வினால் 40க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேர்ந்துள்ள நிலையில், ‘’நீட் தேர்வு குறித்து சிலர் தேவையில்லாத பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்’’ என்று சொல்லி பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்துகிறார் பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன்.
தாலி வரையிலும் கழற்ற வைக்கிறது நீட் தேர்வு என்பதால்தான், ’’தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு கெடுபிடி செய்யும் அதிகாரிகள் வட மாநிலங்களில் காட்டுவதில்லை. வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’’ என்கிறார் நாதக சீமான். அவர் மேலும், ‘’தோடு, மூக்குத்தியில் எல்லாம் பிட் எடுத்துச் சென்று விடுகிறார்கள் என்று கெடுபிடி காட்டினால், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்காதா? என்ற கேள்வியை முன் வைக்கிறார் சீமான்.
விவகாரம் பெரிதாவை உணர்ந்த தமிழிசை, ‘’தேவையற்ற கருத்துக்களைச் சொல்லி நீட்டுக்கு எதிரான கருத்தை பரப்புகிறார்கள். நீட் தேர்வின் கெடுபிடிகளுக்கு அதிகாரிகள்தான் காரணம்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.