நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எதிரான துரோகம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கடுமையான சட்டங்களை இயற்றி இது தடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது.
இளங்கலை மறுத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நேற்றைய தினம் நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 123 மாணவர்கள் நீட் தேர்வெழுதிய மையத்தில், இந்தியில் தேர்வெழுதுவோருக்கு ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டிருந்ததன் அடிப்படையில், பல மணி நேரங்களுக்கு முன்பாகவே கேள்வித்தால் வெளியாகி இருந்ததாக பரபரப்பு எழுந்தது. இதே போன்று பாட்னாவிலும் நீட் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே, கேள்வித்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. ஆகவே, இது தொடர்பான வழக்குகளும் தொடரப்பட்டன.
வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி உள்ளது. நவி மும்பையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயது மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பீகாரில் மட்டும் 14 மாணவர்கள் கைதாகி இருக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்திலும் இந்த மோசடி நடந்துள்ளதாக கைதாகி உள்ளனர். இந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் இதுவரையிலும் 50 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘’நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எதிரான துரோகம். வேலை தேடும் இளைஞர்களுக்கும், கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கும் மோடி அரசு ஒரு சாபமாகிவிட்டது’’என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும், ‘’கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசின் திறமையின்மையினால் தங்களின் எதிர்காலம் பாழாகிவிட்டதாக இளைஞர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலமாக கேள்வித்தாள் கசிவில் இருந்து இளைஞர்களை காக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது’’ என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார்.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு முறைகேட்டு விவகாரத்தை மறுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வினாத்தாள் புகைப்படத்திற்கும் உண்மையான நீட் வினாத்தாளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘’ஒவ்வொரு தேர்வு மையமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெளியாட்கள் அத்துமீறி நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஒவ்வொரு வினாத்தாளுக்கும் நீட் தேர்வு முகமை கணக்கு வைத்துள்ளது. ஆகவே, நீட் வினாத்தாள் கசிவு என்பதில் உண்மை கிடையாது’’ என்று விளக்கம் அளித்திருக்கிறது.
தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்த பின்னரும் நீட் விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.