300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதும், ஒரு வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் என நீட் முறைகேடுகள் அம்பலமாகி அதிரவைக்கின்றன.
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில்தான் நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டது பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் முகியா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சீவ் முகியா வினாத்தாள் மோசடியில் ஈடுபடுவதையே தொழிலாக கடைப்பிடித்து வந்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பெயரளவில் கல்லூரி ஒன்றில் தொழில் நுட்ப உதவியாளராக வேலை செய்துகொண்டே இந்த வேலையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2016ல் பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாளை கசியவிட்டு போலீசில் சிக்கியிருக்கிறார் சஞ்சீவ் முகியா. பீகாரில் நடந்த ஆசிரியர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட வழக்கில் சஞ்சீவ் முகியாவின் மகன் டாக்டர் சிவக்குமார் சிறையில் உள்ளார். இந்த மோசடி தொழிலில் சஞ்வீவ்க்கு உதவியாக அவரின் மனைவி மம்தா தேவி உள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அரசியலில் உள்ள மம்தா தேவி, கடந்த 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால் சஞ்சீவ் முகியாவை பாதுகாப்பது யார்? சஞ்சீவ் மனைவி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது எப்படி? என்ற கேள்விகளை எழுப்புகிறது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி.
நீட் தேர்வு நடந்த மே 5ம் தேதிக்கு முந்தைய நாளில் 25 பேருக்கு வினாத்தாளை கசியவிட்டிருக்கிறது சஞ்வீவ் முகியா கும்பல். இதற்காக ஒவ்வொருவரிடமும் 40 லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது இந்த கும்பல்.
இந்நிலையில் இந்தியாவில் அரசு தேர்வுகள் மாபியா கும்பலின் தயவில் நடப்பதாகவும் காங்., எம்பி கவுரவ் கோகோய் குற்றம்சாட்டியிருக்கிறார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டிருந்தாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது பிஜேந்தர் குப்தா என்றும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருக்கிறார். இந்த மோசடி கும்பலையும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவையும் அவர் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டில் தெரிவித்திருக்கிறார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தடுத்து அம்பலமாகும் செய்திகள் அதிரவைக்கின்றன.