தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் சுமார் 1,000 மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 3 முதல் 20-ஆம் தேதி 2024 வரை NEET நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் தேர்வு செய்ய, 81 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் வகுப்புகளை நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு தனி மையம் அமைத்து பயிற்சியை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறை.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அலுவலர் தலைமையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், கண்காணிப்பாளர், வார்டன் மற்றும் பெண் வார்டன்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்கான நிதி தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஒதுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவ மாணவியர் விடுதிகள் உள்ள ஒரு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி மையமாக தேர்வு செய்யப்படும் என்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்குத் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் உணவு செலவுக்கு தலா 4000 ரூபாய்யும், அவர்கள் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொருவருக்கும் 1000 முதல் 1500 ரூபாய்யும் ஒதுக்கப்பட்டுள்ளது.