மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மருத்துவ மேற்படிப்புகள் இவற்றிற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வுக்குத் தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், ஊடகத்தினர் தமிழ்நாட்டை வித்தியாசமாகப் பார்த்தனர். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் அதிகளவில் மாணவர்களின் தற்கொலை நிகழ்ந்ததும் அதிர வைத்தது.
தமிழ்நாடு மட்டும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தனித்தீவாக இருப்பதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், ஆண்டுகள் கடந்தபோதும் நீட் தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்பும் கவலையும் நியாயமானவை என்பதை மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட நீட் தேர்வு மோசடிகள், வினாத்தாள் குளறுபடிகள், பயிற்சி மையங்களின் கட்டணக் கொள்கை ஆகியவை நிரூபிக்கத் தொடங்கின.
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மிகவும் அப்பட்டமாக தனது மோசடிகளை அம்பலப்படுத்தியது. ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் முழு மதிப்பெண்கள் பெற்றதில் தொடங்கி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மேல்நிலைத் தேர்வில் வெற்றி பெறாமல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மீண்டும் மேல்நிலைத் தேர்வு எழுதியும் தோல்வியைத் தழுவிய நிலையில், நீட் என்பது அடிப்படைக் கல்வித் தகுதி பெற முடியாதவர்கள், பணத்தின் மூலம் பயிற்சி மையங்களின் வழிகாட்டுதலுடன் மருத்துவப் படிப்புக்கு நுழையும் குறுக்கு வழி என்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே நீட் தேர்வின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றம் வரை பேசி வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி உள்பட பலரும் நீட் தொடர்பான கேள்விகளை முன்வைப்பதைக் காண முடிகிறது. 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்கள்.
தரவுகளை பாதுகாக்கும் அளவுகோல்கள், குறிப்பிட்ட காலஅளவிலான தணிக்கைமுறை, தேர்வு மையங்களில் திடீர் ஆய்வுகள், குறைகளைக் களையும் தொழில்நுட்பம், குறைகளில்லாத கட்டமைப்பு, சி.சி.டி.வி. கண்காணிப்பு, தேர்வு மையங்கள் ஒதுக்குவது தொடர்பான மறு ஆய்வு உள்ளிட்ட பலவற்றை உச்சநீதிமன்றம் தனது வழிகாட்டுதலாகத் தெரிவித்து, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு செப்டம்பர் 30ந் தேதிக்குள் இதனை சீர்செய்ய வலியுறுத்தியுள்ளது. நீட் குழப்பங்களுக்கும் மோசடிகளுக்கும் காரணமாக தேசிய தேர்வு முகமையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
2017ஆம் ஆண்டு தொடங்கி நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறது. அரியலூர் அனிதாவிலிருந்து சென்னை ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களின் உயிர் பறிபோயிருக்கிறது. உயிரிழந்த பெற்றோர்களும் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் நீட் பயிற்சி மையங்களின் நிர்வாகப் போக்கால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பது வெளிப்பட்டுள்ளது. அதனால்தான், நீட் தேர்வு என்பது குறைகளைத் தீர்க்கவேண்டிய தேர்வல்ல, முற்றிலுமாக நீக்க வேண்டிய தேர்வு என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது. இந்தியா முழுவதும் பரவலாக நடந்துள்ள நீட் தேர்வு மோசடிகளும் அதையே உறுதி செய்கின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே மாநிலங்களின் விருப்ப உரிமைக்கேற்ப நீட் தேர்வைக் கொண்டு வர முயன்றபோது, தமிழ்நாடு அதை எதிர்த்தது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறக்கூடிய சட்டப்பாதுகாப்பைப் பெற்றது. ஐ.மு.கூ. அரசின் நீட் தேர்வு முறையை நீதிமன்றம் வரை சென்றது. அப்போதும்கூட, மாநில அரசின் உரிமை சார்ந்தே நீட் தேர்வு பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எடுத்துரைத்திருக்கிறார் தி.மு.க. உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. தி.மு.க.வின் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா நீட் மற்றும் தேசிய தேர்வு முகமையை நீக்கவும்-கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் தனி நபர் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலைக்காலத்தில் பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதாவது, மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் சென்றுவிட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதே, எமர்ஜென்சியை ஜனநாயகப் படுகொலை என்று வர்ணிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் நேர்மையான செயலாக இருக்க முடியும். அதன் முதல் கட்டமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குத் தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கச் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் மீது பழி போட்டுவிட்டு நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்குவது பா.ஜ.க.வின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது.