
நெல்லையில் கவின் என்ற இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், தனது அக்காவுடன் தாழ்த்தப்பட்டவரான கவின் பழகி வந்ததே கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் என்ற இளைஞர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வைந்துள்ளார். தனது சொந்த ஊருக்கு வந்த அவர், தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லாததால், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வந்த சுர்ஜித் என்ற இளைஞர் கவினை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார். இச்சம்பவம் குறித்துக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து கவினின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த சுர்ஜித்தையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கவின் தன் அக்காவுடன் பழகியது பிடிக்காத காரணத்தினால் பழக வேண்டாம் என எச்சரித்ததாகவும், அதனை ஏற்காததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு விசாரிக்கையில், சுர்ஜித்தின் பெற்றோர் சரவணகுமார் – கிருஷ்ணவேணி இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட கவினின் தந்தை பேசுகையில், தனது மகனின் கொலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதுடன், ஆணவப் படுகொலையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இவை செய்யாத பட்சத்தில் கவினின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையோ, கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் புகைப்படமோ இது வரை எந்த ஒரு ஊடகத்திலும் வெளியாகவில்லை. சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் காவல் துறையினர் என்பதினால் அவரது புகைப்படம் வெளிவராமல் உள்ளதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்
ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை எனச் சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டபோது, “நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார். தற்போது பட்டப்பகலில் ஆணவக் கொலை நடந்துள்ள நிலையில், எந்த அதிகார, ஜாதிய ஆதிக்க வரம்பும் குறுக்கிடாமல் விசாரணை நடைபெற வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.