ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளின் பட்டியல் நீண்டுகொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவியும் விசாரணையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல குற்றவாளிகள் சிக்கினாலும் இந்த படுகொலை சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை. அவர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்போ செந்திலுக்கு வலதுகரமாக இருந்த மொட்டை கிருஷ்ணனும் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மதுரையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக துபாய் சென்றுவிட்டார் மொட்டை கிருஷ்ணன் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரையும் பிடிப்பதற்காக அவர்கள் தொடர்பான நெட்வொர்க்கை போலீசார் அலசி வந்த போது மோனிஷா என்ற பெயர் அடிபட்டிருக்கிறது. மொட்டை கிருஷ்ணனின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் அவருக்கு மோனிஷா பல லட்சங்களை அனுப்பி இருப்பது, அதாவது 75 லட்சம் ரூபாய் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னர் மொட்டை கிருஷ்ணன் மாநிலம் விட்டு மாநிலம் தப்பிச்சென்று கொண்டிருந்த நிலையில் பணம் அனுப்பியதும், அந்த நேரத்தில் கிருஷ்ணனுடன் மோனிஷ்சா செல்போனில் பேசியதும் தெரியவந்துள்ளது.
இந்த மோனிஷா யார் என்று விசாரணை நடத்தியபோதுதான் அவர் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 7ம் தேதி அன்று நேரில் விசாரணைக்கும் ஆஜராகி இருக்கிறார் மோனிஷா.
கிருஷ்ணனும் தானும் வழக்கறிஞர்கள் என்பதால் பேசிக்கொண்டோம். மற்றபடி பண பரிவர்த்தனை எல்லாம் நடைபெறவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விசாரணையில் மோனிஷா சொன்னதாக தகவல். இதையடுத்து மோனிஷாவின் வங்கி பரிவர்த்தனைகளையும் செல்போன் கால் ஹிஸ்ட்ரியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மோனிஷாவின் தம்பி வழக்கறிஞர். அவரின் நண்பர்தான் கிருஷ்ணன். அந்த வகையில் குடும்பத்தினருடன் தொடர்பு இருந்தது என்றும் செய்திகள் வருகின்றன.