ரஷ்ய (Russia) நிறுவனம் தனது நியூரோசிப் மூலம் புறாக்களை மனிதனால் இயக்கப்படும் ட்ரோன்களாக மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது.
Neiry என்ற ரஷ்ய நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் புறாக்களை ட்ரோன்களாக மாற்றும்பணியில் ஈடுபட்டுள்ளது. மூளையில் சில்லுகள் பொருத்தப்பட்ட உயிருள்ள பறவைகளைப் பயன்படுத்தி, பறக்கும் பண்புகளை சோதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தப் பறவையையும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்று Neiry நிறுவனம் கூறுகிறது. தொடர்ந்து, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தூண்டுவதன் மூலம், பறவையை நோக்கம் கொண்ட திசையில் நகர்த்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பறவை தொடர்ந்து சாதாரண வாழ்க்கையை வாழ்வதால், இயக்க நேரம் உள்ளிட்டவைகளில் இயந்திர ட்ரோன்களை விட பயோட்ரோன்கள் முக்கிய நன்மைகளை வழங்குவதாக (Neiry) நிறுவனம் தெரிவிக்கின்றன.

மேலும், தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, பறவையின் முதுகில் பொருத்தப்பட்ட மின்முனைகளையும், பறவை இடது அல்லது வலதுபுறம் திரும்புவதற்கான தூண்டுதலைப் பாதிக்கும் சிக்னலை அனுப்பும் கட்டுப்படுத்தியையும் நெய்ரி நிறுவனம் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றன. மேலும் இந்த அமைப்பில் ஒரு ஜிபிஎஸ் ரிசீவரும் உள்ளதாகவும், இது பறவையின் இருப்பிடத்தை உரிய நேரத்தில் கண்காணிக்க உதவுவதாக தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, பயோட்ரோனாக பொருத்தப்பட்ட ஒரு புறா (Pigeon) ஒரு நாளில் 310 மைல்கள் வரை பறக்க முடியும் என்றும் நிலையான சூரிய ஒளியுடன், பறவை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1,850 மைல்கள் வரை பறக்க முடியும் என்றும் Neiry நிறுவனம் குறிப்பிடுகிறது.
மேலும், அதிக எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல காக்கைகளையும், கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்க கடற்பறவைகளையும், பரந்த கடல் பகுதிகளுக்கு அல்பட்ரோஸ்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஒரு பயோட்ரோனின் ( Biodrone) விலை ஒரு பாரம்பரிய ட்ரோனின் விலையுடன் ஒப்பிடத்தக்கது என்றும் இந்த திட்டம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் விரைவில் தொலைதூர கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
