இதுவரையிலும் இந்தியாவில் நடைமுறையில் இருந்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை உருவாக்கி, அவற்றை இன்று ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதன் மூலம் ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி எனும் ஆங்கிலேயர் இயற்றிய குற்றவியல் சட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களின்படிதான் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வந்தது. காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இந்த மூன்று சட்டங்களும் இல்லை என்று புகார்கள் எழுந்ததால், மோடி 2014ல் ஆட்சிக்கு வந்ததுமே இச்சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. மோடி 2.0 ஆட்சியில் கடந்த 2019ல் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய சன்ஹிதா என்கிற மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உருவாக்கியது பாஜக அரசு.
இதற்கு முன்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறதே தவிர, இதுமாதிரி சட்டத்தையே மாற்றவில்லை. இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டன. புதிய சட்டங்களில் சில அடிப்படை தவறுகள் உள்ளன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, இந்த புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348ன்படி ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும், சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால், சட்டங்களை இந்திமயம் ஆக்குகிறோம் என்று சொல்லி சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, சட்டங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்கிற விமர்சனமும் உள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களால் காவல் நிலையங்களில் நடைமுறை சார்ந்த பிரச்சனைகள் வரும், குறிப்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் சிக்கல்கள் வரும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால் எதிர்ப்புகள் இருந்தன.
இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்திருந்தார்.
மோடி 3.0வில் இந்த மூன்று சட்டங்களையும் இன்று 1.7.2024ல் அமல்படுத்தி இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
நீதிக்கு முன்னுரிமை:
இந்தியர்களுக்காக, இந்தியர்களால், இந்திய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது புதிய குற்றவியல் சட்டம். பழைய சட்டத்தில், ஆங்கிலேயர் இயற்றிய அந்த சட்டத்தில் தண்டனைக்கு மட்டுமே முக்கியத்தும் இருந்தது. புதிய சட்டத்தில் நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
புதிய சட்டத்தில் சிறார்கள், பெண்களுக்கு முக்கியத்துவம்:
’’நாடு முழுவதிலும் அமலாகியிருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ளது. சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு. கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் மூலம் குற்றங்களில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும்’’ என்று தெரிவித்துள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பூஜ்ய எப்.ஐ.ஆர். முறை – 6 லட்சம் காவலர்களுக்கு பயிற்சி:
’’விசாரணை நடைமுறைகளை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்று சொல்லும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ’’பூஜ்ய எப்.ஐ.ஆர். முறை மூலம் காவல் நிலைய எல்லப்பிரச்சனைகள் தீர்க்கப்படும். புதிய சட்டங்கள் மூலம் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் சிக்கல்கள் வருவதை சரி செய்ய 6 லட்சம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார்.
பூஜ்ய எப்.ஐ.ஆர். மூலம் எந்த காவல்நிலையத்திலும் புகார் கொடுத்து எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். இனிமேல் இது எங்கள் காவல்நிலைய எல்லைக்குள் வராது என்று எந்த போலீசாரும் சொல்ல முடியாது.
புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள் என்ன?
முன்பிருந்த இந்திய தண்டனை சட்டத்தின் 511 பிரிவுகள், 358 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளன.
புகாரளிக்க காவல்நிலையம்தான் செல்லவேண்டும் என்கிற நிலை இனி இல்லை. மின்னணு தகவல் தொடர்பு வசதி வாயிலாக புகார் அளிக்கும் வசதி உள்ளது. வழக்கு நடைமுறைகளை விரைவு படுத்த வேண்டும் என்பதற்காகவும், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் சம்மன்களை மின்னணு மூலம் அனுப்ப வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பூஜ்ய எப்.ஐ.ஆர்., இணைய வழி விசாரணை மற்றும் கிரினிமல் வழக்குகளில் விசாரணைக்கு பின்னர் 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். விசாரணை தொடங்கிய 60 நாட்களில் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற முறைகள் உள்ளன.
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதிய சட்டம். மேலும் அரசுக்கு எதிரான குற்றங்கள், கொலைகளுக்கு புதிய சட்டத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. 18வயது பூர்த்தியடையாத சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ராஜ துரோகம் – அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய புரட்சிக்குழு:
ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது ராஜ துரோக வழக்கு. இதனால் விமர்சனம் இருந்தது. நாட்டில் மன்னராட்சியே இல்லை. பின்பு எப்படி ராஜ துரோகம் என்று சொல்வது சரியாகும் என்ற கேள்வி இருந்தது. அதனால் புதிய சட்டத்தில் ராஜ துரோகம் என்பதை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய புரட்சிக்குழு என மாற்றப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்:
குண்டர் சட்டம் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் பெயர் வேறுபடுவதால், நாடு முழுவதும் ஒரே பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனி நபர்களின் விபரங்கள் பாதுகாப்பு:
தரவுகள் திருட்டு மற்றும் காப்புரிமை திருட்டு உள்ளிட்டவை குற்றமாக கருதப்படுவதால் தனி நபர்களின் விபரங்களை பாதுகாக்கும் நிலை உருவாகி உள்ளது.
பாரதிய சாட்சிய அதினியம்:
குற்ற வழக்குகளில் சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நடைமுறை புதிய சட்டத்தில் மாறியுள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சாட்சிகளை அழைத்துச்செல்லவேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் இருக்கும் இடத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சி அளிக்கலாம். அதாவது இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாட்சிய அதினியம் இயற்றப்பட்டுள்ளது.
எந்த நாட்டில் இருந்தாலும் வழக்கு:
பழைய சட்டத்தின் படி ஒருவர் இந்தியாவில் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், எந்த நாட்டில் இருந்தாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும், நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறது புதிய சட்டம்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சமூக சேவை:
தேவையின்றி நீதிமன்றங்கள் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது என்கிறது புதிய சட்டம். புதிய சட்டத்தின்படி குழந்தையை வாங்கினாலும் விற்றாலும் கடும் அபராதம்.
சிறிய திருட்டு, மது போதையில் வாகனம் ஓட்டினால் சமூக சேவை செய்கின்ற வகையில் உள்ளது புதிய சட்டம்.
காபி பேஸ்ட்:
இந்த புதிய சட்டங்கள் பழைய சட்டங்களின் கட்& காபி பேஸ்ட்தான் என்கிறார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். பழைய சட்டங்களில் உள்ள 99% தான் மூன்று புதிய சட்டங்களும் என்று சொல்லும் அவர், இந்த சட்டங்கள் நீண்ட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமானால் புதிய சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு:
புதிய சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த ஒன்றிய அரசு தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது தீர்வல்ல; விவாதிக்க தாயர் என்றும் சொல்லி நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமித்ஷா.
முதல் வழக்கு:
புதிய சட்டங்கள் அமலுக்கு வந்த பின்னர் டெல்லியில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கம்லா மார்க்கெட்டில் சாலையோர கடை நடத்தி வருபவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்துகொண்டார் என்று அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்ற புறக்கனிப்பில் ஈடுபட்டு வரும் அதே வேளையில், புதிய குற்றவியல் சட்டத்தின் படி சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.