மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பணியாற்றும் ஆளுநர்களுக்கு, துணைவேந்தர்களின் தேர்வு மற்றும் நியமனம் மீதான கூடுதல் அதிகாரத்தை வழங்கி UGC புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இது தற்போது தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற துணைவேந்தர்கள் நியமன சர்ச்சைகள் உள்ள மாநிலங்களை மேலும் பாதிக்கும் என கருதப்படுகிறது.
துணைவேந்தர்களை நியமிப்பதற்காக ஆளுநர்கள் இப்போது 3 உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழுவை உருவாக்க UGC-ன் புதிய வரைவு விதிகள் அதிகாரம் வழங்குகிறது.
UGC-ன் முந்தைய விதிமுறைகளில் இருந்து இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஆகும்; தேடல் குழுவில் 3-5 பேர் கொண்ட நிபுணர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் ஆனால் அந்தக் குழுவை யார் அமைப்பார்கள் என்பதை UGC தனது முந்தைய விதிகளில் குறிப்பிட்டதில்லை.
மேலும் துணைவேந்தர்களாக கல்வியாளர்களை மட்டுமே நியமிக்கும் மரபை உடைத்து, மூத்த தொழில்துறை தலைவர்கள், பொதுத்துறையில் அனுபவமிக்கவர்கள் உட்பட கல்வியாளர்கள் அல்லாதவர்களை நியமிக்க புதிய வரைவு விதிகள் அனுமதிக்கிறது.
UGC விதிமுறைகளுக்கு மாநிலப் பல்கலைக்கழகங்கள் இணங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இரு வேறு தீர்ப்புகளில் உத்தரவிட்டிருக்கிறது.
ஆகையால், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், UGC-ன் திட்டங்களை அணுகும் திறனை இழக்கும் அபாயம் உள்ளது.
ஒப்பந்த பேராசிரியர்கள் நியமானத்தில் இருந்த உச்சவரம்பு நீக்கம்
பல்கலைக்கழகங்களில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில் ஒப்பந்த பேராசிரியர்களின் நியமனத்தில் இருந்த 10% வரப்பை நீக்க UGC-ன் புதிய விதிகள் பரிந்துரைத்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) உடன் உயர்கல்வியை ஒருங்கிணைக்கும் UGC-யின் முயற்சிகளின் ஒரு பகுதியான இந்த புதிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்படுவதற்கு முன் பொதுமக்களின் கருத்துகளுக்காக வரைவு விதிகளை UGC வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
UGC NEW RULES LINK: University Grants Commission Regulations, 2025