கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. எக்ஸ் தளத்திலும் #Nirbhaya2 என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.ஆர். அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2ம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்று போலீஸ் நண்பர்கள் குழுவைச்சேர்ந்த, அந்த கல்லூரி பற்றி நன்கு அறிந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘நீங்கள் விரும்பினால் என்னை தூக்கில் போடுங்கள்’ என்று வீராப்பாக சொல்லி வருகிறார்.
இவ்வழக்கில் போலீசார் ஒரு வாரத்திற்குள் விசாரணையை முடிக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாராக உள்ளோம் என்று உறுதி அளித்திருந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதற்கிடையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ பயிற்சி மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு ஐந்தாவது நாளாக மேற்கு வங்க மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்திலும், தெலுங்கானாவிலும் கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. தேசிய அளவில் போராட்டத்திற்கும் மருத்துர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் #Nirbhaya2 என்ற ஹேஷ்டேக் வேகமாகப்பரவி வருகிறது.