
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆவணங்கள் சில டெல்லி கையில் சிக்கி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் வேறு வழியின்றியே அவர் பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதித்திருக்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.
அதே நேரம் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்தால் கூட்டணிக்கு தயார் என்று பழனிசாமி நிபந்தனை வைத்ததாகவும், தமிழக பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க வேண்டும் என பழனிசாமி டெல்லியில் கோரிக்கை வைத்ததாகவும் தகவல்.
அதற்கேற்ற மாதிரிதான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்றும், புதிய தலைவர் அறிவிக்கப்பட்ட பின்னர் நிறைய பேசுவோம் என்றும் அண்ணாமலை சொல்வதன் மூலமே அவர் பாஜகவில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று உறுதியாகிவிட்டது.

ஆனாலும், பழனிசாமியின் அதிருப்தியாளர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததால் பழனிசாமியுடன் டீல் ஒத்து வராததால் செங்கோட்டையன் தலைமையில் புதிய அதிமுகவை தொடங்குகிறதா பாஜக? என்ற கேள்வி எழுந்தது. செங்கோட்டையனின் இந்த டெல்லி விசிட்டுக்கு பழனிசாமியின் இன்னொரு அதிருப்தியாளர் தங்கமணிதான் பாலமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு அடுத்ததாக சி.வி.சண்முகம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததும், நிர்மலா சீதாமனை தம்பிதுரை சந்தித்து பேசியதும், மாநிலங்களவை விவாதத்தின் போது தம்பிதுரையும் நிர்மலா சீதாராமனும் ரகசியமாக பேசிக்கொண்டதும் பழனிசாமி சார்பில் நடந்த கூட்டணி பஞ்சாயத்து என்று பேச்சு எழுந்தது.
இப்போது சென்னை வந்த நிர்மலா சீதாராமன், மீண்டும் செங்கோட்டையனை அழைத்து பேசி இருக்கிறார். அதிமுகவில் நீக்கப்பட்ட அக்கட்சியின் சீனியர் கே.சி.பழனிசாமியையும் அழைத்துப் பேசி இருக்கிறார்.
இதனால், பழனிசாமியின் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு வலு சேர்க்கிறதா பாஜக? இல்லை, பழனிசாமியின் அதிருப்தியாளர்களை வளைத்து புதிய அணி அமைக்க முயல்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.